செவ்வாய், 30 நவம்பர், 2010

மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டவர்களையே வெற்றி பெற வைக்க முடியாத காங்கிரஸ்

1967ல் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கியது முதல் தொடர்ந்து தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன திராவிடக் கட்சிகள். அண்ணாவில் தொடங்கி கலைஞர், எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் வரை 43 ஆண்டுகளாக திராவிடத்தின் பெயரால் இயங்கும் கட்சிகளின் தலைவர்களே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறார்கள்.இந்திய மாநிலங்களில் தமிழகத்தின் அரசியல் களம் மட்டும் எப்போதுமே மாறுபட்டிருக்கும்.
மாநிலக்கட்சிகள் தான் இங்கே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தேசியக்கட்சிகள் மாநிலக்கட்சிகளைச் சார்ந்தே அரசியல் செய்ய வேண்டிய நிலைதான் இன்று வரை தொடர்கிறது. ஆனால் 2011 ல் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் இதே நிலை நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.
எந்த திராவிடக்கட்சி நம்மை சேர்த்துக்கொள்ளும், யார் நமக்கு அதிக இடங்கள் தருவார்கள் என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் காத்திருக்கும் காங்கிரஸ் கட்சி. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர பிரதான கட்சிகள் அனைத்தும் காதல் வசனம் பேசிக்கொண்டிருக்கின்றன. கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியுடனான எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது என்கிறது தி.மு.க.! நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயாராக இருப்பதாக சம்மனே இல்லாமல் ஆஜராகி பேட்டி கொடுக்கிறார் ஜெ... காங்கிரஸ் கட்சி தலைமையில் ஒரு அணி அமைந்தால் அதில் சேர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று வெளிப்படையாக பேட்டி கொடுக்கிறது தே.மு.தி.க.... பா.ம.க.வும் இந்த நிலையில்தான் இருக்கிறது என்கிறார்கள் அந்தக்கட்சியின் முக்கியத் தலைவர்கள். இப்படி பிரதான கட்சிகள் அனைத்தும் போட்டிப் போட்டுக் கொண்டு  ங்கிரசின் உறவுக்காக காத்திருக்கிறார்கள்.
எப்போதும் மத்தியில் ஆட்சி அமைப்பதை மட்டும் கருத்தில் கொள்ளும் காங்கிரஸ் கட்சியும் கூட இந்த முறை மாநில ஆட்சி பற்றியும் பேசுகிறது. காங்கிரசை காக்க வந்திருக்கும் அவதார புருஷராக அந்தக் கட்சித் தலைவர்களால் வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி எப்படியும் தமிழக ஆட்சியில் காங்கிரஸ் பங்கெடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார். தமிழக கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கெடுக்க சென்னை வந்திருந்த ராகுல் தனிப்பட்ட முறையில் அனைத்து பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார்.

அப்போதே, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவதே என் நோக்கம். அதற்கான முயற்சியை முதலில் உ.பி.யில் மேற்கொண்டேன். உடனடி பலன் இல்லாவிட்டாலும் ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. அந்த வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே என் முக்கிய குறிக்கோள் என்றார். எம்.பி. தேர்தலுக்கு முன்பு அவர் இதைச் சொன்னபோது காங்கிரஸ் கட்சியின் நிலை கவலைக்கிடமாக இருந்தது.
திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியா என்று பெரும்பாலானவர்கள் முகத்தில் சிரிப்பு தெரிந்தது. ஆனால் தமிழகத்தின் கட்சிகள் காங்கிரசுக்கு விரிக்கும் ரத்தினக் கம்பள வரவேற்பை பார்க்கும் போது ராகுலின் விருப்பம் விரைவிலேயே நிறைவேறிவிடுமோ என்று தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்காவிட்டாலும் ஆட்சியில் பங்கு பெறும் அளவிற்கு நிலைமை மாறி வருகிறது என உற்சாகமாக பேசி வருகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.
உண்மையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா? 1989க்கு பிறகு காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதே இல்லை. அதனால் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி என்ன என்பதை உறுதியாக சொல்லமுடியாது.சமீபத்தில் எடுக்கப்பட்ட பல சர்வேக்களின் கணக்குப் படி 8 லிருந்து 10 சதவீத வாக்கு வங்கியைக் கொண்டதாக இருக்கிறது காங்கிரஸ். தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட போதும் கடந்த 2009 எம்.பி. தேர்தலில் பாதிக்கு பாதி இடங்களை மட்டுமே காங்கிரசால் கைப்பற்ற முடிந்தது.

சொந்தக் கட்சியின் வி.ஐ.பி. வேட்பாளர்களாக இருந்த மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டவர்களையே வெற்றி பெற வைக்க முடியாத காங்கிரஸ் கட்சிக்கு இந்த ஓராண்டில் அப்படி என்ன செல்வாக்கு கூடிவிட்டது? மத்திய அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளாலும், விலை வாசி உயர்வு உள்ளிட்ட அம்சங்களாலும் அதிருப்திதான் கூடியிருக்கிறதே தவிர வாக்கு சதவீதம் கூடவில்லை.

தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் காதல் வசனங்களால் காங்கிரஸ் தலைவர்களின் தன்னம்பிக்கை மட்டுமே கூடியிருக்கிறது.
தொண்டர் பலத்தையும், மக்கள் செல்வாக்கையும் மட்டுமே நம்பி தேர்தல் களம் கண்ட காலங்களில் மாநிலக்கட்சிகளுக்கு இருந்த தன்னம்பிக்கை இப்போது இல்லை. அதிகாரமும், பணபலமும்தான் வெற்றியை உறுதி செய்யும் என்றும் அதற்கு மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காங்கிரசின் துணை அவசியம் என்பதாலேயே போட்டி போட்டுக்கொண்டு அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றன மாநிலக்கட்சிகள். திராவிடக்கட்சிகளின் இந்த நம்பிக்கை இழப்புதான் காங்கிரசுக்கு பெரிய பலமாக இருக்கிறது. அதிகாரத்தை மையமாக கொண்டதாக, பண பலத்தை மையமாக கொண்டதாக மாறியிருக்கும் இன்றைய அரசியல் நிலைதான் இதற்கெல்லாம் காரணம். தமிழகத்தின் செல்வாக்கான தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் தன்னம்பிக்கை குறைவையும் சரியாக கணக்கிட்டிருக்கிறது காங்கிரஸ் தலைமை. அந்தக் கணக்கீடுதான் ஈழத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்பட வழிவகுத்தது.
திராவிடக்கட்சிகள் தன்னம்பிக்கையோடு இருந்திருந்தால் போர் நிறுத்தம் செய்ய ராஜபட்சேயை வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.
திராவிடக்கட்சிகள் தன்னம்பிக்கை குறையாமல் இருந்திருந்தால் காவிரி நீர் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையிலும் பாராமுகம் காட்டிக்கொண்டிருக்காது காங்கிரசின் மத்திய ஆட்சி. எந்தக் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அண்ணா தலைமையிலான திராவிடக்கட்சி பாடுபட்டதோ... அதே காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டு வந்துவிடுவதில் முனைப்பாக இருக்கின்றன இன்றைய திராவிடக்கட்சிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக