செவ்வாய், 2 நவம்பர், 2010

புலிகளின் அரசியல் பிரிவு சமாதான செயலகப் பகுதியிலிருந்து , இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் – பிரதியமைச்சர் முரளிதரன்

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு, சமாதான செயலகம் ஆகியவை அமைந்திருந்த பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவதுடன்   அப்பிரதேச      மக்களுக்கு அவர்களுடைய   காணிகள் வழங்கப்படும்    என்று மீள்   குடியேற்ற     பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியுள்ள மருதநகர்,   பரவை பாஞ்சான்,   மலையாளபுரம் மக்களைச் சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  கிளிநொச்சி   மத்திய    கல்லூரியில்,   இப் பிரதேசங்களைச்   சேர்ந்த 50 குடும்பங்களின்   154 பேர் தற்காலிகமாக   தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது குறைகளைக் கேட்டறியும் வகையில் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த அமைச்சரிடம் மக்கள் தமது குறை நிறைகளைத் தெரிவித்தனர். தாங்கள்    இறுதிக்   கட்ட  யுத்தத்தின் போது கிபீர் விமானங்களால் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர்   தான் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் உள்ளிட்ட  முக்கிய நிறுவனங்கள் அமைந்திருந்த பிரதேசங்களில் இருந்து வெளியேறியதாக இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால் தமது சொந்த இடங்களை வழங்கினால் தொழில் மற்றும் ஏனைய தேவைகளுக்கும் வசதியாக இருக்கும் எனவும் பிரதி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர்.    இவ் விடயம் குறித்து உடனடியாக இராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசிய பிரதி அமைச்சர்,     இப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் உயர் பீடங்கள் அமைந்திருந்த பிரதேசங்கள் என்பதால் இராணுவம் தங்கியிருப்பதாகவும் பொதுமக்கள் இருந்த பிரதேசம் என்றால் அவற்றினை விரைவில் வழங்க முடியும் என இராணுவ அதிகாகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளமையால் பாடசாலையின் கல்வி நடவடிக்கையில் சிக்கல்களை எதிர் நோக்குவதாக  அதிபர் ஆலாலசுந்தரம்  தெரிவித்தார்.    இதற்குப் பதிலளித்த அமைச்சர் விரைவில் பாடசாலைக் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் குடியமர்த் தப்பட்டுவிடுவர்.
அதனையடுத்து பாடசாலை கட்டிடங்களை நீங்கள் பயன்படுத்த முடியும். அத்துடன்  ‘இசுரு’ திட்டத்தின் கீழ் உள் வாங்கப்பட்டுள்ள இப் பாடசாலையின் அபிவிருத்தி குறித்து சிறந்த திட்டங்களை முன் வையுங்கள். அதன் பின்னர் உங்கள் பாடசாலையை மேலும் தரம் உயர்த்துவதற்கான செயற்திட்டங்கள்  முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதன் போது மாணவர்களிடம் அவர்களது கல்வி நடவடிக்கைகள், குறைபாடு கள், பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக