சனி, 6 நவம்பர், 2010

தாயாரைப் பார்க்க பிரபாகரனின் சகோதர சகோதரிகளுக்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பு


 பிரபாகரனின் சகோதர சகோதரிகளை இலங்கைக்குள் வரவிடுமாறு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திவயின சிங்கள ஊடகம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி இலங்கை இணைய தளங்களில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜரத்னம், இளைய சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோர் இலங்கைக்குள் வர அனுமதியளிக்குமாறு முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் வெளிநாட்டிலுள்ள தமது பிள்ளைகளைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்ததால், இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். வல்வெட்டித்துறை பகுதியில் பிரபாகரன் சகாக்களுடன் இவர்கள் சந்திக்க உள்ளனர் என இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததை அடுத்து, அரசாங்கம் இவர்களுக்கு அனுமதி வழங்குவதை நிராகரித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமது சகோதரரை இலங்கை இராணுவத்தினரால் தொடக்கூட முடியாது என வினோதினி தெரிவித்திருந்ததாகவும் திவயின சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளதாக இலங்கை இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக