செவ்வாய், 16 நவம்பர், 2010

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவிஞர் வாலி புகழாரம்!

Stars celebrate Vaalis birthday
 இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று கவிஞர் வாலி புகழாரம் சூட்டியுள்ளார். கவிஞர் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களின் தொகுப்பான "வாலி - 1000 என்ற நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் வாலியின் 80வது பிறந்தநாள் விழா ஆகியவை சென்னையில் நடைபெற்றது. நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

விழா நிறைவில் கவிஞர் வாலி உணர்ச்சி பொங்க ஏற்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்... என்ற எனது பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்தான் காரணம். என்னைப் பாராட்ட இங்கே பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி. இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். கமல்ஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர். இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். "படகோட்டி படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம்.

எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்துக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே காரணம். 20ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை. என்னை பாராட்ட வந்தவர்கள், பாராட்டி இருப்பவர்கள் அனைவருக்கும்.

இவ்வாறு வாலி பேசினார். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசிலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக