ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஒரு சில மாதங்களில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் : கோதபாய ராஜபக்ஷ

இன்னும் ஒரு சில மாதங்களில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான தி எக்கனோமிஸ்ட்டிற்றுக்கு அளித்த செவ்வியில் கோதபாய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு மூன்று மாதங்களில் அவசரகாலச் சட்டம் தளர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பில் உலகின் பல நாடுகளும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டு வருவதாக தமிழ் அரசியல் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டிருந்தன.

எனினும், பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் நோக்கில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்காக படை வீரர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டதாகவும், யுத்தம் நிறைவடைந்த காரணத்தினால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுகள் உயர்வடைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக