சனி, 13 நவம்பர், 2010

யாழ். பல்கலை.வவுனியா வளாகத்தில் ஏராளம் முறைகேடுகள்: அனைத்து பல்கலை.மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் விரிவுரை மண்டபம் மற்றும் ஏனைய வசதிகள் போதுமான அளவில் இல்லை என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றம் சாட்டுகின்றது. அதன் காரணமாக போதுமான வசதிகள் இன்மையைக் காரணம் காட்டி, அண்மையில் அவ்வளாகத்துக்கு தெரிவான 150 மாணவர்களின் பதிவை மேற்கொள்வது கூட நிர்வாகத்தினால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் மாணவர் அமைப்பு தலையிட்டதன் காரணமாக குறித்த மாணவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே வளாகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தங்கு விடுதியானது ஐந்து கிலோ மீற்றருக்கும் அப்பால் அமைந்துள்ள ஒரு சாதாரண வீடு என்று சுட்டிக் காட்டும் மாணவர் அமைப்பானது, அங்கு உணவு மற்றும் குடி நீர் பற்றாக்குறை தீவிரமாக நிலவுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றது.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தென்னிலங்கை பல்கலைக்கழக வளாகங்களின் வசதிகளைப் போன்று வவுனியா வளாகத்தின் வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக