புதன், 17 நவம்பர், 2010

சென்னை:மேலும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

கடந்த வெள்ளிக்கிழமை அன்று 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சென்னை மத்திய புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் விரித்த வலையில் நேற்று மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் சிக்கினார். அவரது பெயர் சுந்தரமூர்த்தி ( 48). இவர், மனித உரிமை சமூக பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
இவரது அலுவலகம் நந்தம்பாக்கத்தில் உள்ளது. இவர்மீது பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிறுதொழில் அதிபர் எத்திராஜன் (55) என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று முன்தினம் மாலையில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

எத்திராஜனுக்கு புதுவண்ணாரப்பேட்டையில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை குமார் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். வீட்டை காலி செய்வதில் குமாருக்கும், எத்திராஜனுக்கும் இடையே மோதல் உள்ளது.

இந்த மோதலையொட்டி, தீண்டாமை ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் எத்திராஜன் மீது குமார் புகார் கொடுத்தார். இந்த புகார் மனு இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியிடம் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் எத்திராஜன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சுந்தரமூர்த்தி ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால் எத்திராஜன் ரூ.25 ஆயிரம் லஞ்ச தொகையை இரண்டு, மூன்று தவணைகளாக தருவதாக சொல்லிவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டார்.

முதல் தவணை தொகை ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே வரும்படி இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, எத்திராஜனிடம் கூறியுள்ளார். அதன்படி நேற்று பிற்பகலில் லஞ்ச பணம் ரூ.5 ஆயிரத்தை எத்திராஜன் கொடுக்கும்போது சுந்தரமூர்த்தி அதை வாங்கியுள்ளார்.

பின்னர் ஜீப்பில் ஏறி செல்வதற்கு முற்பட்டார். அப்போது லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் இம்மானுவேல் ஞானசேகரன், அசோகன், உச்சப்பட்டி பரமசாமி ஆகியோர் லஞ்ச இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக