திங்கள், 22 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தை சந்திக்க கூட்டமைப்பு நாட்டம்


தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று இரண்டாவது நாளாக கொழும்பில் கூடி கலந்துரையாடியது. இந்தக் கலந்துரையாடலின் போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாட தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைவதை கூட்டமைப்பு வரவேற்பதாகவும், எனினும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கொள்கைத் தொடர்பில் அறிந்துக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எனினுத் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தை சந்திப்பது குறித்து கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனே முடிவு எடுப்பார் என அவர் குறிப்பிட்டார். இன்றைய சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, அரசியல் தீர்வு, ஜனாதிபதியை சந்திப்பது, 2011ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. இதேவேளை, எதிர்வரும் வாரம் இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு இந்திய தூதரகத்தின் யாழ், கிளையை திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்வில் பங்குகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வைபவத்தில் கலந்துக் கொள்வது குறித்தும் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக