வெள்ளி, 5 நவம்பர், 2010

இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கு சொந்தமானதல்ல

இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கு சொந்தமானதல்ல. இதுவே அரசாங்கத்தின் கொள்கையாகும். எனவே, இன விகிதாசார பிரதேசங்கள் என்பது நிராகரிக்கப் படுகின்றது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. காணிகள் இருக்குமிடத்திலேயே மக்களைக் குடியேற்றமுடியும். இதன்போது சிங்களம், தமிழ், முஸ்லிம் என வேறுபாடு பார்க்கமுடியாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்கள் இன விகிதாசாரத்தை மாற்றக் கூடிய குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக கொழும்பு மாவட்ட கத்ததோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நல்லிணக்க ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறுகையில்,
நல்லிணக்க ஆணைக்குழுவும் பேராயர் சாட்சியம் அளித்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.அவரை மதிக்கிறோம்.ஆனால் ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் தொகையில் மாற்றத்தை மேற்கொள்ள முயற்சி நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கு சொந்தமான பூர்வீகப் பிரதேசம் அல்ல என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.
சிங்களவர்கட்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவொரு பிரதேசத்திலும் வாழும் உரிமையுண்டு. தனிப் பிரதேசங்கள் என்ற கோட்பாடுகளின் காரணமாகவே நாட்டில் பேரழிவுகள் ஏற்பட காரணமாகின. இங்கு வாழும் 20 மில்லியன் மக்களும் எங்கும் வாழலாம். அதற்கு தடை விதிக்க முடியாது
கொத்மலை நீர் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட போது மலையக மக்களின் இனவிகிதாசாரம் குறையும் என தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் நாட்டின் அபிவிருத்திக்கு பிரதேசங்கள் தேவையென்னும் போது இனவிகிதாசாரம் பார்க்க முடியாது.அக்கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் எப்பிரதேசத்தில் வெற்றுக்காணிகள் உள்ளனவோ.அங்கு மக்கள் குடியேற்றப்படுவார்கள்.அதனையே டி.எஸ்.சேனநாயக்கவும் மேற்கொண்டார்.இதன்போது சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என இனபாகுபாடு பார்க்க முடியாது.இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் அனைத்து இனங்களுக்கும் சொந்தமாகும்.
நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது.ஆனால் அந்த பயங்கரத்தின் தேவைகளை நிறைவேற்றும் சூழ்ச்சிகரமான சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் நன்கறியும் இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்துக்க சொந்தமான பூர்வீக பிரதேசம் அல்ல என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக