வியாழன், 18 நவம்பர், 2010

Aung san sui kyi கற்பனையில் கூட வாழ முடியாத அளவு கொடுமைகள் நிறைந்தது.

சிலருடைய வாழ்க்கையைப் பார்த்தால் அவர்களைப் போலவே வாழ வேண்டும் என்று தோன்றும். இவருடைய வாழ்வோ வேறு எவராலும் கற்பனையில் கூட வாழ முடியாத அளவு கொடுமைகள் நிறைந்தது. இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதர். அமைதியை ஆயுதமாகக்கொண்டு போராடிக்கொண்டிருப்பவர். உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் சமூகப் போராளிகளுக்குப் போராட்டத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தவர்.
மியான்மரின் தேசத் தந்தையும் விடுதலைப் போராட்டத் தலைவருமான ஆங் ஸான் – தா கின் கீயின் மூன்றாவது குழந்தை சூ சி. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது தேசம். நாடு முழுவதும் விடுதலைக்கான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தலைமை தாங்கிப் போராடிக்கொண்டிருந்தார் ஆங் ஸான். 1947-ல் இடைக்கால அரசாங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அவருடைய கட்சி வெற்றி பெற்றது. இதைக் கண்ட சதிகாரர்கள், ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது ஆங் ஸானையும் அவருடைய கட்சியின் முக்கியத் தலைவர்களையும் சுட்டுக் கொன்றார்கள். அப்போது சூ சிக்கு வயது இரண்டு. அடுத்த ஆண்டு மியான்மர் விடுதலை பெற்றது.
சுதந்தரம் பெற்ற அரசாங்கத்தில் சமூக நலத் திட்ட இயக்குனராகப் பணியாற்றினார் சூ சியின் அம்மா. குழந்தைகளுக்குத் தங்கள் நாட்டைப் பற்றியும் கணவரின் போராட்டங்கள் பற்றியும் அடிக்கடி சொல்லிச் சொல்லி வளர்த்தார்.
சூ சிக்கு 16 வயதானபோது அவருடைய அம்மா இந்தியாவுக்கான மியான்மரின் தூதராக, டெல்லிக்கு அனுப்பப்பட்டார். டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளை முடித்தார் சூ சி. இந்தியாவில் இருந்த காலங்களில் அவர் மகாத்மா காந்தியின் தத்துவங்களின் மீது அதிகம் ஈர்க்கப்பட்டார். அஹிம்சையே சிறந்த ஆயுதம் என்பதை உணர்ந்துகொண்டார். மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டங்களை முடித்தார்.
அப்போதுதான் இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஏரிஸ் அறிமுகமானார். அவர் திபெத்திய கலாசாரம் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்தார். இருவரும் அரசியல், பொருளாதாரம் குறித்து நிறைய விவாதிப்பார்கள். கடிதம் எழுதிக்கொள்வார்கள். நாளடைவில் நட்பு அடுத்த பரிமாணத்தை அடைந்து, காதலாக மாறியது. ஐ.நா. சபையில் உதவி செயலாளர் வேலை சூ சிக்குக் கிடைத்தது.
1972-ம் ஆண்டு சூ சிக்கும் ஏரிஸுக்கும் லண்டனில் திருமணம் நடந்தது. அலெக்சாண்டர், கிம் என்று இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார் சூ சி. தன் தந்தை ஆங் ஸானின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். அந்த ஆராய்ச்சியின்போதுதான் தன் நாட்டு மக்கள் படும் துயரத்தை முழுவதுமாக அறிந்தார் சூ சி.
மிகத் தொலைதூரத்தில் இருந்துகொண்டு ஆராய்ச்சி, குடும்பம் என்று வாழ்ந்துகொண்டிருந்தாலும், தன் தாய் நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் சூழ்நிலைகளையும் கவனமாகப் பார்த்து வந்தார் சூ சி. ராணுவ ஆட்சியில் மக்களின் நிலைமை மிகவும் மோசமடைந்திருந்தது. எங்கும் பசி. வறுமை. வேலையில்லாத் திண்டாட்டம். ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.
‘எங்கள் நாட்டு மக்களின் நலனுக்காகத்தானே என் அப்பாவும் மற்றவர்களும் போராடினார்கள். உயிர் துறந்தார்கள். இவ்வளவு பாடுபட்டு கிடைத்த சுதந்தரத்தை, ராணுவ ஆட்சி சீரழித்துவிட்டது. என் நாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது என்னால் இங்கு சந்தோஷமாக, கணவர், குழந்தைகள் என்று வாழ்ந்துகொண்டிருக்க முடியவில்லை ஏரிஸ்.’
‘புரிகிறது சூ சி. நீ என்ன செய்ய விரும்புகிறாய்?’
‘என் நாட்டு மக்களுக்காக நான் போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை வந்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?’
‘இது என்ன கேள்வி? உன் விருப்பம் போல் நீ எதையும் செய்யலாம். உனக்கு நான் எப்பொழுதும் துணையாக இருப்பேன்.’
விரைவில் சூ சியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது. மியான்மருக்குச் சென்றார் சூ சி. அப்போது நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. தினமும் மக்கள் சூ சியின் வீட்டுக்கு வந்து தங்களுடைய குறைகளைச் சொல்லி, அழுவார்கள். சூழல் மிகவும் மோசமாகிக்கொண்டிருப்பதை உணர்ந்த சூ சி, உடனே களத்தில் இறங்க முடிவு செய்தார்.
அது 1988. மிக முக்கியமான காலகட்டம். ஜனநாயகம் மலரவேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மக்களும் களமிறங்கினர். ராணுவம் அனுப்பிய ஆயுதப்படை 200 மாணவர்களைக் கொன்று குவித்தது. இந்தச் செய்தி பரவியதும் மக்கள் கொதித்துப் போனார்கள். நாடு முழுவதும் மாணவர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், புத்தப்பிட்சுகள், தொழிலாளர்கள் என்று அனைவரும் போராட்டத்தில் இறங்கினர். எங்கு திரும்பினாலும் போராட்டம். ரத்த வெள்ளம். வேறு வழியின்றி ராணுவ ஆட்சி, இடைக்கால அரசாங்கம் அமைய ஒப்புக்கொண்டது. இடைக்கால அரசாங்கத்தால் நாட்டில் ஏற்பட்ட எழுச்சியைக் கண்ட ராணுவம், மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டதாக அறிவித்தது.
National League for Democracy என்ற கட்சியை ஆரம்பித்தார் சூ சி. பல்வேறு உலக அமைப்புகளுக்கு விரிவாகக் கடிதம் எழுதினார். உலக நாடுகளுக்கு இந்தச் செய்திகளைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் ஏராளமான கூட்டங்களுக்குச் சென்று, மக்களிடம் பேசினார். அரசாங்கம் அவருடைய கூட்டங்களுக்குத் தடை விதித்திருந்தபோதிலும் மக்கள் தடையை மீறி கலந்துகொண்டனர்.
ராணுவக் கெடுபிடிகள் அதிகரித்தன. சூ சியின் கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டனர். சூ சியின் மீது கேவலமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். அவரைக் கொல்வதற்கு ஆள்களை அனுப்பினர். எதைக் கண்டும் சூ சி பயப்படவில்லை. இதற்கிடையில் அவருடைய அம்மாவும் இறந்து போனார்.
1988 ஜூலை 19-ந் தேதி தியாகிகள் தினம் அனுஷ்டிக்க முடிவு செய்தார் சூ சி. எரிச்சல் அடைந்த ராணுவ அரசு அன்றைய தினத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஜூலை 20 அன்று ஓர் ஆண்டு வீட்டுக் காவலில் சூ சி வைக்கப்பட்டார். அவருடைய கட்சியைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். தன்னுடைய ஆதரவாளர்கள் எப்படிச் சிறையில் நடத்தப்படுகிறார்களோ, அதே போலத் தானும் நடத்தப்பட வேண்டும் என்றார் சூ சி. ராணுவ அரசாங்கம் செவி சாய்க்காததை அடுத்து, உண்ணாவிரதம் இருந்தார்.
செய்தி கேட்டு ஏரிஸும் குழந்தைகளும் சூ சியைக் காண ஓடோடி வந்தனர். அதுதான் சூ சி தன் குடும்பத்துடன் இருந்த கடைசித் தருணங்கள். 12 நாள்களுக்குப் பிறகு, அவருடைய ஆதரவாளர்கள் மீது சட்டப்படி மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சூ சி.
விடுமுறை முடிந்தது. ஏரிஸுக்கும் குழந்தைகளுக்கும் சூ சியை விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால் தன் மனைவி சாதாரண மனுஷி இல்லை என்பதை உணர்ந்திருந்த ஏரிஸ் குழந்தைகளுடன் கிளம்பினார். இங்கிலாந்துக்குச் சென்று இறங்கியதும்தான் மியான்மர் ராணுவ அரசாங்கத்தின் இன்னொரு கோர முகம் தெரிந்தது. குழந்தைகள் இருவரின் மியான்மர் பாஸ்போர்ட்டை ரத்து செய்திருந்தது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஏரிஸ் மட்டும்  சூ சியைப் பார்க்க வந்தார். அதற்குப் பிறகு அவரையும் அனுமதிக்கவில்லை.
உலக நாடுகளின் கவனம் மியான்மரின் மீது விழுந்தது. பல்வேறு நாடுகள், தலைவர்கள் சூ சியை விடுதலை செய்யச் சொல்லி வலியுறுத்தினர்.
‘சூ சியை விடுதலை செய்கிறோம். ஆனால் அவர் நாட்டை விட்டு உடனே வெளியேற வேண்டும்’ என்றது ராணுவம்.
‘பர்மாவில் முறைப்படி தேர்தல் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் அதிகாரத்தை வழங்க ஒப்புக்கொண்டால், நான் வெளியேறுகிறேன்’ என்றார் சூ சி.
மக்களிடம் அதிருப்தி. உலக நாடுகளிடமிருந்து எதிர்ப்பு. இறுதியில் தேர்தல் நடத்துவதாக அறிவித்தது ராணுவ அரசாங்கம். மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தேர்தல் வேலைகள் ஆரம்பித்தன. வேட்பாளர் பட்டியலில் மிகக் கவனமாக சூ சியின் பெயரைச் சேர்க்கவிடாமல் பார்த்துக்கொண்டது அரசு.
தேர்தல் வந்தது. சூ சியின் கட்சி பெரும்பான்மையான இடங்களை வென்றது. 485 இடங்களில் 392 இடங்களை சூ சி கட்சி வெற்றி பெற்றிருந்ததைக் கண்டு அரண்டு போனார்கள் ராணுவ ஆட்சியாளர்கள். அவர்களால் ஓர் இடத்தைக் கூடப் பெற முடியவில்லை. மீண்டும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தது. எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன.
உலக நாடுகளின் கண்டனம், ஐ.நா.வின் வேண்டுகோள் எதற்கும் ராணுவ அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லை.
ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான போராட்டங்களுக்காக 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு சூ சிக்கு வழங்கப்பட்டது. அதைப் பெறுவதற்குக் கூட ராணுவம் அனுமதிக்கவில்லை. சூ சியின் மகன்கள் பரிசைப் பெற்றுக்கொண்டார்கள். பரிசு தொகை முழுவதையும் மியான்மர் மக்களின் ஆரோக்கியம் மற்றும் கல்விக்குச் செலவிடுமாறு அளித்துவிட்டார் சூ சி. அதன் பிறகு மகாத்மா காந்தி விருது உள்பட உலகம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள், அரசாங்கங்கள் ஏராளமான விருதுகளை அளித்தன.
1996-ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சூ சி, காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. கார் ஓட்டுநரின் உதவியால் உயிர் தப்பினார் சூ சி. மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் .
பொதுவாழ்க்கை இப்படிப் போய்க்கொண்டிருந்தபோது, சொந்த வாழ்க்கையிலும் மிகத் துயரமான செய்தி சூ சியை வந்தடைந்தது. ஏரிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மனம் உடைந்து போனார் சூ சி. அவர் இங்கிலாந்து செல்ல ராணுவ அரசாங்கம் அனுமதித்தது. போய்ப் பார்க்கலாம் என்று தோன்றினாலும், அடுத்த கணமே அந்த உண்மை உறைத்தது. தான் வெளியேறினால், தன்னை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்காது ராணுவ அரசாங்கம் என்பதை உணர்ந்தார். எனவே மிகுந்த மனக்கஷ்டத்துடன் அந்த அனுமதியை நிராகரித்தார்.
ஏரிஸ் வருவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவரை இங்கு வைத்துப் பராமரிக்க முடியாது என்று காரணம் சொல்லி, அனுமதியை மறுத்தது அரசாங்கம். அன்பு மனைவியைப் பார்க்காமலே 1999-ம் ஆண்டு  53 வயதில் இறந்து போனார் ஏரிஸ்.
ஐ.நா.வின் வற்புறுத்தலில் 2002-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார் சூ சி. ஆனால் அடுத்த ஆண்டே மீண்டும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். அவருடைய மகன்களைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. பேரக்குழந்தைகளைப் பார்த்தது கூட இல்லை. ஒன்றிரண்டு உதவியாளர்களுடன் வீட்டுக்குள்ளேயே இருந்து வந்தார். தொலைபேசியில் பேச அனுமதி இல்லை. செய்திகளைப் படிக்க முடியாது. யாரையும் பார்க்க அனுமதியில்லை. மிகக் கடுமையான காலங்கள்.
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த தண்டனைக் காலம் முடிந்தது. சூ சி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதலை நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உலக மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் சூ சியின் மகிழ்ச்சி இதில் இல்லை. மியான்மரில் என்று ஜனநாயகம் மதிக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சியில் அமர்கிறார்களோ அன்றுதான் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி. அந்த நாளுக்குத்தானே இத்தனை வலிகள். போராட்டங்கள். இழப்புகள். தியாகங்கள்!
[பி.கு: சூ கி என்று நம் ஊடகங்கள் எழுதுவது தவறு. சூ சி என்றுதான் உச்சரிக்கவேண்டும். தலைப்பிலுள்ள ‘டா’ என்பது, பர்மிய மொழியில் ஒரு மரியாதை விளிப்பு.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக