மீள்குடியேற வேண்டும் -முஸ்லிம் மக்கள்
- பி.பி.சி
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை உரிய முறையில் அங்கு மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்திவருகின்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் சார்பில் சாட்சியமளித்தவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு சாட்சியமளித்தவர்களில் ஒருவராகிய சர்மிளா ஹனிபா வடமாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இல்லை என்பதை அவர் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மீள்குடியேற்றத்தின்போது, இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை மீள்குடியேற்றுவதில் காட்டப்படுகின்ற அதே அளவிலான அக்கறை இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதிலும் காட்டப்பட வேண்டும் எனவும் இடம்பெயர்ந்துள்ள வடமாகாண முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு மூன்றாவது நாளாக குடத்தனை, நெல்லியடி, சாவகச்சேரி ஆகிய இடங்களில் நடத்திய விசாரணைகளின்போது ஆயுத முனையில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளவர்கள், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் தொடர்பாகவே அதிகமானவர்கள் சாட்சியமளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளுக்குச் சென்று பிபிசி செய்தியாளர்கள் செய்திகளைத் திரட்டலாம். அதற்குத் தடையில்லை என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் ஆரம்பமாகியபோது அங்கு செல்வதற்கு பிபிசி செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இப்போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக