ஞாயிறு, 28 நவம்பர், 2010

13வது திருத்தப்படி தீர்வு! யாழ்ப்பாணத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா!

இலங்கையின் 13வது அரசியலமைப்புத் திருத்த்தின் அடிப்படையில் ஒர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையே ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாகவும், இத்தகைய பேச்சுவார்த்தையொன்று எல்லா சமூகங்களினதும் பங்களிப்புடன் விரைவில் ஆரம்பமாகும் என நம்புவதாகவும் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைதூதரகம் மற்றும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கிருஷ்ணா யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தார்.
இவ் வைபவத்தில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு செயலர் நிருபாமா ராவ், இலங்கைக்கான இந்திய தூதுவர் மற்றும் யாழ்மாவட்ட பா.உகள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய கிருஷ்ணா இலங்கையின் ஆயுத போராட்டத்தின் முடிவு பிரச்சினையை புரிந்துணர்வுடன் அணுகி, உண்மையான தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய நகர்வுக்கான அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடந்து முடிந்துள்ள இறுதி யுத்தத்தையடுத்து இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா வழங்கிய அவசர உதவிகள், மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்தின்போது தேவைப்பட்ட அவசர உதவிகள் என்பவை பற்றி குறிப்பிட்ட அவர், வடபகுதியின் அபிவிருத்திக்கான பல்வேறு வேலை திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான உழவு இயந்திரங்கள், விதை தானியங்கள் என்பனவற்றையும் கிருஷ்ணா வழங்கியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் அரியாலை நாவலடியில் இந்திய உதவியோடு மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு திட்டத்திற்கான அடிகல்லையும் அவர் நாட்டி வைத்தார்.
அதன் பின்னர் மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்குச் செல்லும் ரயில் பாதையை அமைப்பதற்கான வேலை திட்டத்தையும் எஸ்.எம்.கிருஷ்ணா ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக