வியாழன், 18 நவம்பர், 2010

இந்திய அரசின் உதவியில் யாழ்.வந்துள்ள 100 டிராக்டர்கள் வடக்கு விவசாயிகளுக்கு கையளிக்கப்படும்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தைத் திறந்து வைக்க வரவுள்ளார். அவர், வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தேவைக்காக 100 டிராக்டர்களையும் அன்றைய தினம் கையளிப்பார். வடக்கில் விவசாய மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்குவதாக இந்தியா வழங்கிய உறுதிமொழியின் ஒரு பகுதியாக இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இலங்கை இந்திய கூட்டு ஆணைக்குழு மாநாட்டுக்காக எதிர்வரும் 25ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வருகிறார். இந்தப் பயணத்தின் போது அவர் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை நகரங்களில் இந்தியத் துணைத் தூதரகங்களை ஆரம்பித்து வைப்பார்.
யாழ்.நகரில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைப்பதற்காக 27ஆம் திகதி யாழ். வருகிறார் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. அவரது பயணத்தை ஒட்டிய ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் வரும் அமைச்சர், வடக்கு விவசாயிகளுக்கென 100 டிராக்டர்களையும் கையளிக்க உள்ளார். இதற்கான ட்ராக்டர்களில் பெரும்பகுதி நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தன.
இந்தியாவின் மகேந்திரா நிறுவனத் தயாரிப்புக்களான டிராக்டர்கள் உழவுக் கலப்பையுடன் விவசாயிகளுக்காக வழங்கப்பட உள்ளன. அவற்றின் முகப்பில் இந்திய அரச குறியீடான அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கிருஷ்ணா விவசாயப் பிரதிநிதிகளிடம் இந்த டிராக்டர்களை நேரடியாகக் கையளிப்பார். வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என, போர் முடிந்த கையோடு இந்திய அரசு அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாகவே டிராக்டர்கள் வழங்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக