புதன், 27 அக்டோபர், 2010
Walmart இந்திய நிறுவனங்களுடன் கைகோர்க்கிறது வால்மார்ட்
சர்வதேச அளவில் சில்லரை வணிகத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் வால் மார்ட் நிறுவனம், இந்தியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களுடன் கைகோர்க்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்தியா வந்துள்ள வால் மார்ட் நிறுவன குளோபல் தலைவர் மார்க் டியூக், தலைநகர் டில்லியில், இந்தியாவின் பிரபல மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த கூட்டத்தில், கோல்கோட்- பாமோலிவ், சாம்சங், புராக்டர் அண்ட் கேம்பிள், டாபர் இந்தியா, கிராப்ட் புட்ஸ், நெஸ்லே, பெப்சிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்திய நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுடனனான சந்திப்பிற்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த வால்மார்ட் நிறுவன குளோபல் தலைவர் மார்க் டியூக் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்திய நிறுவனங்களுடன் கைகோர்க்க இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், தங்களது நிறுவனம், நேரடியாக விவசாயிகளிடம் தொடர்பு கொள்ள இருப்பதாகவும், இதன்மூலம், உற்பத்தியை துரிதப்படுத்தி, விநியோகத்தை விரிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் வரவால் ஏற்படும் நன்மைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியச் சந்தையில் கால்பதிக்கும் பொருட்டு, தங்கள் நிறுவனம் இந்த திட்டத்திற்காக, 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கி உள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவி்த்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக