வெள்ளி, 15 அக்டோபர், 2010

TULF.பாதுகாப்பு வலயம் என்று கூறி தடுத்து வைத்திருக்கும் பகுதிகளில் எமது மக்கள் குடியேற்றப்படுவதற்கும்

ஊடக அறிக்கை: தமிழர் விடுதலைக் கூட்டணி
தென் இலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குறிப்பிட்ட சில குடும்பங்கள் தாங்கள் குடியிருந்த பகுதிகளில் தங்களை மீளக் குடியமர்த்த வேண்டும் எனக்கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஹெலஉறுமய கட்சியும் இடம்பெயர்ந்த ஒன்றரை லட்சம் சிங்களவர்களையும் வடக்கு கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதில் உள்ள அரசியல் நோக்கம், சரி, பிழை என்பவற்றுக்கு அப்பால் அந்த மக்கள் சொந்தமாக குடியிருந்திருந்தால,; அவர்கள் அந்த இடங்களில் மீளக் குடியேற அனுமதிப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் வாடகைக்கு குடியிருந்தவர்கள் தங்களுக்கும் காணி தந்து மீள்குடியமர்த்தப்பட வேண்டும் எனக் கேட்பதில் எந்தவிதமான நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
தென் இலங்கை மக்கள் யாழ்ப்பாணத்தில் தங்கள் சொந்த இடங்களில் குடியேற எவ்வளவு உரிமையுள்ளதோ அதேயளவு உரிமை 1956, 1958, 1977, 1983 போன்ற வருடங்களில் நடந்தேறிய கலவரங்களினால் தங்கள் சொந்த இடங்களில் தேடிய சொத்துக்கள் அனைத்தையும் போட்டது போட்டபடியே கைவிட்டு ஓடிவந்த எமது தமிழ் மக்களுக்கும் உள்ளது. குறிப்பாக அனுராதபுரம், கெக்கிராவ, தம்புள்ள, களேவெல, திஸ்ஸமஹரகம போன்ற பகுதிகளில் தங்களுக்கு சொந்தமான காணிகளில் மீள்குடியேறவோ, அல்லது அந்த சொத்துக்களை எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி விற்பனை செய்வதற்கோ வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். இதில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கி தமிழ் மக்களுக்கும் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக உயர் பாதுகாப்பு வலயம் எனக்கூறி பல வருடங்களாக மீளக்குடியேற விடாமல் தடுத்து வைத்திருக்கும் எம் மக்களை அந்தப் பகுதிகளில் குடியேற அனுமதிக்கப்படவேண்டும். தென் இலங்கை மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேற காட்டும் அக்கறையை, சம்மந்தப்பட்டவர்கள் பாதுகாப்பு வலயம் என்று கூறி தடுத்து வைத்திருக்கும் பகுதிகளில் எமது மக்கள் குடியேற்றப்படுவதற்கும், காட்டவேண்டும். இல்லாவிட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த மக்களை ஒன்று திரட்டி விரைவில் ஒரு தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கும். “சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்” என எழுத்தில் மட்டும் இருந்தால் போதாது அது செயலிலும் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதையே தமிழர் விடுதலைக் கூட்டணி விரும்புகின்றது.
இரா. சங்கையா.
யாழ் மாநகர சபை உறுப்பினர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக