திங்கள், 11 அக்டோபர், 2010

TNA சாட்சியம் அளிக்காது ,கற்றுக்கொண்ட பாடங்கள்

கற்றுக்கொண்ட பாடங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாட்சியம் அளிக்காது

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சாட்சியம் அளிக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
நேற்று பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு இடம்பெற்ற கடலலையோடு இறுவெட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆலய தலைவர் சி.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன்.
இந்த நிகழ்வில் முதல் இறுவட்டை ஆலய தலைவர் சி.செல்வராசா பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவுக்கு முதல் இறுவெட்டை வழங்கி இறுவெட்டு வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலய பிரதமகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ரி.தவராசா, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு,ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் கே.பேரின்பராசா,பெரியகல்லாறு 1 தெற்கு கிராம உத்தியோகத்தர் எஸ்.ஞானசிறி,கல்லாறு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்.பைசுல் அமீர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு போர் அனர்த்தத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்கு 5047 மில்லியன் ரூபா வீடமைப்புக்கும், 247 மில்லியன் ரூபா, அவர்களுக்கான 25000 ரூபா கொடுப்பனவுகளுக்கும் தேவையாக உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போது எமது மாவட்டம் வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியை நம்பியோ உள்ளது. அந்த நிதி எமக்கு கிடைக்கவில்லையென்றால் எமது மக்களின் சமாதிகளுக்கு மேல் புற்கள்தான் முளைத்திருக்கும். அந்தளவுக்கு இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எமது மக்கள் மத்தியில் உள்ளது.
18வது அரசியல் சீர் திருத்தம் கொண்டுவரப்பட்டது யாரால் என்பது இன்னும் தெரியவில்லை.அத்துடன் அந்த 18வது சரத்தில் என்ன உள்ளது என்பது கூட மக்களுக்கு தெரியாத புதிராகவே இருந்துவருகின்றது.
இந்த அரசியல் சீர்திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதி இரண்டு தடவைக்கு மேல் எத்தனை தடவையும் பதவியில் இருக்கலாம் என தெரிவிக்கினறது. 18வது சரத்துக்கு முக்கியத்துவமளித்துள்ள அரசாங்கம், ஏற்கனவே அங்கீகரித்துள்ள 13வது 17வது அரசியல் சீர்திருத்ததை அமுல்படுத்தாமல் தூக்கியெறிந்துள்ளது.
மேலும் 17வது அரசியல் சீர்த்திருத்தத்தில் இருந்த பொலிஸ் ஆணைக்குழு 13வது அரசியல் சீர்திருத்த சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரம் இந்த 18வது அரசியல் சீர்த்திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளதால் இன்று கிழக்கு முதலமைச்சர் கைவிடப்பட்ட நிலையில் உள்ளார்.அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
மட்டக்களப்புக்கு வந்தபோது சிலர் என்னிடம் வந்து ஏன் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஏன் சாட்சியம் அளிக்கவில்லையென கேட்டனர்.
இது தொடர்பில் நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். இந்த ஆணைக்குழுவுக்கு முன்னால் தெரிவிக்கப்படும் கருத்து சரியான கருத்தாகவும் ஒரே கருத்தாகவும் இருக்கவேண்டும்.
துமிழ் தேசிய கூட்டமைப்பில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.இவர்கள் அனைவரும் சாட்சியமளிக்கும்போது கருத்துகள் முரண்படாமல் இருக்கவேண்டும்.
அதற்காக ஏனைய இடங்களில் சாட்சியமளிக்காமல் இதற்காக ஒரு நேரத்தை பெற்று ஆணைக்குழுவினரை தனியாக சந்தித்து அறிக்கையினை அளிக்கவுள்ளோம்.
அதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு ஆணைக்குழுவுக்கு முன்னிலையிலும் சாட்சியமளிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக