புதன், 27 அக்டோபர், 2010

Thirumavalavanதலித் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்லுறவு நீண்டகாலமாக

ராஜீவ்காந்தி சிலை அவமதிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை' -சோனியாவுக்கு திருமாவளவன் கடிதம்
`ராஜீவ்காந்தி சிலை அவமதிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை' என்று சோனியாகாந்திக்கு தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் கட்சி ஆகும். நாங்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.
2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்களும் ஒரு உறுப்பினர்.
இந்த சமயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கும் அழைப்பு விடுத்ததற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீருக்கு சென்ற அனைத்து கட்சிகள் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமனம் செய்ததற்கும், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் விரும்பத்தகாத சம்பவம் பற்றி உங்களுக்கு சில விளக்கங்கள் அளித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
சென்னை அசோக்நகரில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலையை அவமானம் செய்த சம்பவத்தை கண்டித்து, அந்த மனித தன்மையற்ற நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று எங்கள் சார்பில் கேட்டிருக்கிறோம். ஆனால், சில காங்கிரசார் அங்கு கூடிநின்று நடத்திய போராட்டத்தில் எங்கள் கட்சியினரையும் உள்நோக்கத்தோடு அதில் சம்பந்தப்படுத்தி பேசியதோடு என்னை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த சம்பவத்தில் எங்களுக்கு துளியளவும் தொடர்பு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்வதில் மட்டுமல்ல இந்த முழு இந்தியாவையும் வழிநடத்தி செல்லும் உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு.
தேசத்தின் நலனுக்காக உங்களது குடும்பம் அளித்துள்ள பங்களிப்பை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். தமிழகத்தில் தலித் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்லுறவு நீண்டகாலமாக இருந்து வருகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் தலித் மக்களின் நிலை பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் எல்.இளையபெருமாள் மற்றும் தமிழகத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் ஆகியோரை பெருமையுடனும், அன்புடனும் நினைவுகூறுகிறோம்.
மீண்டும் ஒருமுறை உங்கள் குடும்பத்திற்கு, குறிப்பாக ராஜீவ்காந்திக்கு எனது மரியாதையையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தம் உண்டு என்று கூறப்படுவதை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக