வியாழன், 14 அக்டோபர், 2010

Thailand இலங்கைத் தமிழர் நாடு திரும்பிச் செல்ல மறுப்பு.

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 130 பேரையும் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இலங்கை திரும்ப விரும்பினால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்யத் தயாரென்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இலங்கைக்குத் திரும்பிச் செல்லப்போவதில்லையென அவர்கள் மறுத்துவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாய்லாந்து குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள பொலிஸார், குடியிருப்புத் தொகுதிகளைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்தி குடிவரவுச் சட்டத்தை மீறியவர்களைக் கைது செய்துள்ளனர். இதில் இலங்கைத் தமிழர்கள் 130 பேர் அடங்குவர். இவர்களுள் பலர் வீசா காலாவதியாகி நான்கைந்து வருடம் இருந்துள்ளனர். இதில் 34 பேர் பெண்கள் என்றும் பாங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

தாய்லாந்து அதிகாரிகள் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தூதரக அதிகாரிகள் தடுப்பு முகாமுக்குச் சென்று இலங்கைத் தமிழர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் வீசா சட்டத்தை மீறி உள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தூதரகத்திற்குத் தகவல் வழங்கிய அந்நாட்டு அதிகாரிகள், அவர்கள் வீசா சட்டத்தை மீறியிருப்பதாக கூறியுள்ளனர்.

அதேவேளை, புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் இருக்கிறார்கள் எனக் குறிப்பிடவில்லை எனவும் பாங்கொக் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது தொடர்பில் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக