சனி, 16 அக்டோபர், 2010

S.S.Chandran.என் மூச்சு அடங்குறது பொதுக்கூட்ட மேடையாத்தான்

ஒரே ஒரு கடமைதான் பாக்கி இருக்கு! டாக்டருக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டேன்னா பொறுப்பு முடிஞ்சிரும். பிறகு வீட்டைப் பத்தின கவலை இல்லாம இருப்பேன்.என் மூச்சு அடங்குறது பொதுக்கூட்ட மேடையாத்தான் இருக்கும்!’’என்று அடிக்கடி சொல்வார் எஸ்.எஸ்.சந்திரன்!
மகன் ரங்கராஜனை ‘டாக்டர்’ என்றுதான் அழைப்பார். அவர் சொன்னதில் மரணம் மட்டும் சாத்தியமாகி இருக்கிறது.மகனை மணமேடையில் பார்ப்பதற்குள் இயற்கை அவரை தகன மேடைக்கு அனுப்பி விட்டது.
சிவகங்கையில் பிறந்து வளர்ந்து கொழும்புவில் சில காலம் நாடக நடிகனாக வாழ்ந்து சென்னைக்கு வந்தவரை திரை உலகம் ஏற்றுக்கொள்ள, 850 படங்கள் நடித்து முடித்திருக்கிறார். சந்திரனின் தொடக்க கால வாழ்க்கை சிறு சேமிப்புத் திட்டம், குடும்பக் கட்டுப்பாடு பிரசார நாடகங்களைச் சுற்றியே அமைந்திருந்தது!
காலையில் 9 மணிக்கு நடக்கத் தொடங்கியவர் பிற்பகல் 2 மணிக்கு ஈரோடு சென்று இரவில் நாடகம் நடத்தியிருக்கிறார்.
நாடகக்குழுவினருடன் பஸ்சில் சென்றவர் இயற்கை உபாதையால் வழியில் இறங்கிக் கொள்ள,பஸ் புறப்பட்டுவிட்டதால் நெடிய பாதயாத்திரை! ‘‘கடும் வெயில்! கையில் காசு இல்லை! சொன்ன நேரத்தில் நாடகம் நடக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என்பதால் நடந்தேன்! கால் வலியைப் பொறுத்துக் கொண்டு நடித்தேன்.கால் வீங்கிவிட்டது! மருத்துவரைப் பார்க்கவும் வசதி இல்லை!காவிப் பத்துப் போட்டுக் கொண்டு பயணம் தொடர்ந்ததை என்னால் மறக்க முடியாது!’’என்று சந்திரன் அடிக்கடி சொல்வார்.
நாடகக் குழுவில் நடித்தவர்களில் பெரும்பாலோர் ஹோட்டலில் வேலை பார்த்தவர்கள் என்பதால் அடிக்கடி அவர்களைப் பார்க்கப் போய்விடுவார்.
சாப்பாடு பிரச்னையை இப்படி சமாளித்ததும் உண்டு.ஒரு சிசர் சிகரெட், டீயுடன் காலை நேரப் பசியைத் தணித்துக் கொண்டதும் உண்டு!
மதுரைக்குப் பக்கத்தில் கொடிமங்கலம் என்கிற கிராமத்தில் அவர் நடத்திய நாடகத்தைப் பற்றி சிரிக்கச் சிரிக்கச் சொல்வார்.அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய நாடகம் அது! நாடகத்தின் இடையில் ஊர்ப் பெரியவர் வந்து பபூனையும் ஸ்திரீ பார்ட்டையும் ஆடச் சொல்லி அரிவாளைக் காட்டினாராம்.
‘இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்.
கஷ்டப்பட்ட காலத்தில் சாப்பிட வசதி இல்லை! காசு இருக்கிற காலத்தில் இஷ்டப்பட்டதைச் சாப்பிடமுடியல!சிரிப்பு நடிகனின் வாழ்க்கை ரொம்பவும் ரிஸ்க்! தூங்கும்போது கூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும்.
இல்லேன்னா முடிஞ்சிருச்சு கதைன்னு நம்மை முடிச்சிருவாங்க! என்பார்.
எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த சந்திரனுக்கு ‘சிவப்புமல்லியில் நல்லவேடம் கொடுத்தவர் ராம.நாராயணன். இவருடன் சேர்ந்த பின்னர்தான் விஜயகாந்த், ராதாரவி, சந்திரசேகர் ஆகியோருடன் நெருக்கம் ஏற்பட்டது.
மு.க.முத்து, ராதாரவி, சந்திரசேகர் ஆகியோருடன் தி.மு.க. பிரசார நாடகங்களில் நடித்திருக்கிறார். அரசியலில் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தார்.
வைகோ தனிக்கட்சி ஆரம்பித்தபோது இவரும் தி.மு.க.வில் இருந்து விலகினார்.அங்கிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.2001-லிருந்து ஆறாண்டு காலம் எம்.பி.யாக இருந்தார்.
சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் விழாவுக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு காரில் பயணம் செய்த போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது! அவ்வளவாக போக்குவரத்து இல்லை!வெயிலும் காற்றும் கடுமையாக இருந்தது! அரசியல், நாட்டு நடப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்.
சாலை ஓரமாக ஒரு முதியவர் மேலாடை இல்லாமல் முண்டாசுக் கட்டிக் கொண்டு தேய்ந்த ரப்பர் செருப்புடன் நடந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டார்.
அம்பாசிடர் காரில் பின் சீட்டில் சந்திரனைச் சேர்த்து மூன்று பேர். முன் சீட்டில் டிரைவருடன் மூன்று பேர் நெருக்கியடித்துக் கொண்டு தான் உட்கார்ந்திருந்தார்கள். அந்த முதியவரை தன் பக்கமாக உட்கார வைத்துக் கொண்டு தூத்துக்குடியில் இறக்கிவிட்டு கைச்செலவுக்கு நூறு ரூபாயும் கொடுத்ததை அவரது இரக்க குணத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் அரசியல் என்று மேடை ஏறிவிட்டால் அனல் பறக்கப் பேசுவார்! ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரை உலக கலைஞர்களில் இவர்தான் முதலாவது ஆள்! சக கலைஞர்களை உறவு முறை சொல்லி ‘மாப்ளே’, ‘தம்பி’ என்று பாசமுடன் பேசுவார். பிற கலைஞர்களும் இவரை அன்புடன் ‘மாமா’ என்று நேசமுடன் அழைப்பார்கள்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கலைஞர்களுடன் இவர் பேசினாலும் சிலர் இவருடன் பேசுவதற்குத் தயங்கினார்கள்.
காதல் மனைவியுடன்தான் வாழ்க்கை!நாடக வாழ்க்கையில் அரும்பிய காதலுக்கு அடையாளமாக இருமகன்கள், ஒருமகள். மகன் ரோகித்தை கலை வாரிசாகக் கொண்டு வந்தார். கல்யாணத்தில் முடிந்தது. மகள் கண்மணிக்கு திருமணம் முடிந்துவிட்டது. டாக்டர் ரங்கராஜனுக்கு பெண் தேடிக் கொண்டிருந்தபோதுதான் மரணம் அவரைத் தேடி வந்தது.
உடல்நலம் குன்றிய பிறகு மேடைப்பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளுமாறு டாக்டர்களும்,கட்சித் தலைமையும் எஸ்.எஸ்.சந்திரனைக் கேட்டுக்கொண்டும் அவர் பொருட்படுத்தவில்லை.கட்சிக் கூட்டம் பேச மன்னார்குடி சென்ற இடத்தில் மாரடைப்பால் அவர் இறந்து போனார்.
விசுவாசத்திற்கு விலையாக தன் உயிரையே கொடுத்திருக்கிறார் எஸ்.எஸ்.சந்திரன்.    
- தேவிமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக