வியாழன், 21 அக்டோபர், 2010

The Hindu:எப்போதும் இல்லாத அரிய சந்தர்ப்பம் ஆனால்..... இனப் பிரச்சினைத் தீர்வில் திசைமாறிச் செல்கிறது அரசு

- இந்திய நாளிதழ் "த இந்து'
இலங்கையில்,ராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதைய போக்கும், அதன் அண்மைக்காலச் செயற்பாடுகளும், அந்நாட்டின் இனப்பிரச் சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டு வருவதிலிருந்து திசை மாறிச் செல்கிறது என்ற கருத்துப்பதிவை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உண்டாகியுள்ள அதிருப்தியை அடுத்த மாதம் தமது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்கவுள்ள  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது ஆலோசனை வழங்கியுள்ளது பிரபல ஆங்கில நாளிதழ் "த இந்து'. அப்பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் இதனை அழுத்தித் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஒரு திருப்புமுனையை, புதியபக்கத்தை, உருவாக்கி நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரேயடி யாகத் தீர்வுகாண ஜனாதிபதி மஹிந்த முன்வரவேண்டும். இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்கு என்றுமில்லாதவாறு அரிய சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்துள்ளது. அதனை அதிகார சக்தி மிக்க அவர், தக்கபடி பயன்படுத்தி நாட்டை புதியபாதையில் இட்டுச்செல்ல வேண்டும் என்று இந்து பத்திரிகை இடித்துரைத்துள்ளது.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு: இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டிலேயே உருவாக்கப்படவேண்டும் என்ற மஹிந்தவின் தரப்புக்களிடையே கருத்து முற்றிலும் சரியானது. இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட கருத்து இணக்கத்தை உண்டாக்கும் பொருட்டு அதற்கான ஒருவழியாக  வாகனமாக   கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.
ஆனால் அந்த ஆணைக்குழுவின் விசாரணைக்குரிய காலம் 2002 ஆம் ஆண்டிலிருந்து போர்முடிந்த  வேளை வரைக்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாமல் ஆழ வேர்விட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க நல்லிணக் ஆணைக்குழுவின் மட்டுப்படுத்தப்பட்ட காலஎல்லை உதவாது.மேலும் அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இவையாவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியைத் திசைதிருப்பியுள்ளன.
இன்றைய காலகட்டத்தில், தமிழ்மக்களின் அரசியல் தலைமைத்துவம் பிளவுபட்டிருப்பது கண்கூடு. எனினும் இந்தப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தமிழர் பிரதேசத்துக்கு, 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணவேண்டும். இதுவே உகந்த மார்க்கம் என்று பிணக்குகளைக் கையாண்ட அனுபவம் உள்ள நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்.
கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டதால் இலங்கையில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை அவரிடம் வலியுறுத்துவதற்கு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது விடயத்தில் தீர்க்ககரமாகச் செயற்படுவதன் அவசியத்தை எடுத்துரைக்க முடிந்தது.
போரின் போது இடம்பெயர்ந்த இலங்கைத்தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, விரைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக இருந்த ஆயுதப்போர் முடிந்து பதினாறு மாதங்களாகி விட்ட இவ்வேளையில் , மீள்குடியேற்றம் மற்றும் அவசியப்பணிகள் பெரும் பிரச்சினைகளே அல்ல.
இதற்கிடையில் மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது பதவிக்காலத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் கிடைத்துள்ளது. இந்த ஆதரவைப் பயன்படுத்தி ஒருவர் ஜனாதிபதியாக   இரண்டு தடவைகளுக்கு கூடுதலாகவும் பதவி வகிக்க வகை செய்யும் விதத்தில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு விட்டது.
அர்த்தமுள்ள அரசியல் தீர்வு எதனையும் அந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை  நிறைவேற்றுவதற்கு அரசமைப்புத்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும்.
நியாயமான தீர்வு ஒன்றைக்கொண்டு வந்து , உண்மையான இன நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு கடந்த முப்பது வருடங்களில் கிடைத்திருக்கும் மிக உகந்த அரிய சந்தர்ப்பம் இதுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக