வியாழன், 7 அக்டோபர், 2010

ஜெயலலிதாவுக்குகொலை மிரட்டல் : நான் மனித வெடிகுண்டு;உங்களுக்கு மரணம் உறுதி:

 


அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே 9 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக சென்னை கிண்டி போலீசில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசுக்கு மாற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு சிபாரிசு செய்துள்ளது.

மதுரை பொதுக்கூட்டத்திற்கு வந்தால் திரும்பி போகமாட்டீர்கள் என்று மிரட்டல் கடிதங்களில் வாசகங்கள் இருந்தன. நேற்று 10-வது முறையாக ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்த கடிதம், 4 பக்கத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், எழுத்துப்பிழைகள் நிறைய இருந்தன.

அந்த கடிதம், வத்தலக்குண்டு காந்தி நகர், மதுரைவீரன் கோவில் தெரு, 1-வது வார்டு கவுன்சிலர் சி.அமுதவேல் என்ற பெயரில் வந்துள்ளது. 98421 45011 என்ற செல்போன் நம்பரும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நேற்று வந்த கடிதத்தில், ’’இதற்கு முன்பு மிரட்டல் கடிதம் எழுதியவர்கள் அவர்களுடைய உண்மையான பெயரையும், முகவரியையும் எழுதவில்லை. ஆனால், நான் என்னுடைய உண்மையான பெயரை, முகவரியோடு குறிப்பிட்டுள்ளேன். சி.பி.ஐ. போலீஸ் விசாரிக்கட்டும். என்னை ஒன்றும் செய்ய முடியாது. எனது குலதெய்வம் என்னை காப்பாற்றும். 
இதற்கு முன்பு வந்த கடிதங்களில், ஜெயலலிதா மதுரைக்கு வரக்கூடாது என்றும் வந்தால் உயிரோடு திரும்பமாட்டீர்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், நான் நீங்கள் கண்டிப்பாக அக்டோபர் 18-ந் தேதியன்று மதுரை பொதுக்கூட்டத்திற்கும், 30-ந் தேதியன்று தேவர் குருபூஜைக்கும் தவறாமல் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்போது உங்கள் மரணம் உறுதி.

இந்த புனித பணி தொடங்கிவிட்டது. இதற்காக 57 பேர் குண்டர் தடுப்பில் இருந்து ஜெயிலைவிட்டு விடுதலையாகி இருக்கிறார்கள். நான் ஒரு மனித குண்டு. தற்கொலை படையும் ரெடியாகிறது’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்றைய மிரட்டல் கடிதம் குறித்தும் கிண்டி போலீஸ் நிலையத்தில் ஜெயா டி.வி.யின் உதவித் தலைவர் எஸ்.ரங்கநாதன் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நேற்றிரவு போலீசார் கூறினார்கள். விரைவில் இந்த வழக்குகளை சி.பி.ஐ. போலீஸ் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 உண்மையில் வார்டு கவுன்சிலர்தான் எழுதினாரா அல்லது அவரது பெயரை தவறாக பயன்படுத்தி இந்த கடிதம் எழுதப்பட்டு உள்ளதா என்று போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள்.

கடிதத்தில் உள்ள செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது அது `சுவிட்ச் ஆப்' என்று பதில் வந்தது. புகார் நகல்கள் தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கும், சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக