ஞாயிறு, 24 அக்டோபர், 2010

யாழ்ப்பாணத்தில் புதிய டிஜிட்டல் தொலைக்காட்சி அலைவரிசை: இலவச கல்வி ரிவியும் ஆரம்பம

பி.ஏ.சி.அபேவர்த்தன, குகநாதன், ரி.இந்திரகுமார்டொல்வின் ரிவி என்ற பெயரில், புதிய டிஜிட்டல் தொலைக்காட்சி சேவையொன்று அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவிருக்கிறது.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் செயற்படும் கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களூடாக இந்த டிஜிட்டல் தொலைக்காட்சி சேவையையும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று, இதுதொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இலக்கம் 45, மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள யாழ் தொழில்நுட்பவியல் நிறுவனத்திலுள்ள கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர் சங்க அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இந்தச் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
ஐரோப்பிய நாடுகளிலும், கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொலைக்காட்சி சேவையை வழங்கிவரும் டான் தொலைக்காட்சிக் குழுமத்தினரும், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் தொலைக்காட்சி சேவையை வழங்கிவரும் ரிவி லங்கா தொலைக்காட்சிக் குழுமத்தினரும் இணைந்து, இலங்கையிலேயே முதல் தடவையாக, டிஜிடல் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டொல்வின் தொலைக்காட்சி சேவையை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்துகின்றனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள 91 கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களின் ஒன்றியம், டென் ஸ்ரார் பிறைவேட் லிமிட்டட் நிறுவனத்தினூடாக, இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியுடன், சட்டரீதியாக இந்தத் தொலைக்காட்சி சேவையை வழங்குவார்கள் என்று, டென் ஸ்ரார் நிறுவனப் பணிப்பாளரும், கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர் சங்கத்தின் செயலாளருமான ரி.இந்திரகுமார் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
டொல்பின் தொலைக்காட்சி என்ற இந்த டிஜிட்டல் தொலைக்காட்சி சேவையூடாக 37 தொலைக்காட்சி அலைவரிசைகளை மக்கள் பார்வையிட முடியும்.
இந்தச் சேவையை சாதாரண அன்ரனாக்கள் மூலமே மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும், இது டிஜிட்டல் தொலைக்கட்சி சேவை என்பதால், இங்கு பாவனையிலிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இதைப் பார்வையிடுவதற்கு டொல்பின் டிஜிடல் தொழில்நுட்பக் கருவியொன்றையும் மக்கள் பயன்படுத்தவேண்டியிருக்கும் என்று இன்றைய செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கப்பட்டது.
கல்வி ரிவி
டொல்பின் தொலைக்கட்சி சேவையினூடாக அடுத்த மாதம் முதல் கல்வி ரிவி என்ற பெயரிலான விசேட இலவச கல்விச் சேவையொன்றும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக, டான் ரிவி பணிப்பாளர் குகநாதன் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.ஆரம்பத்தில் ஒரு அலைவரிசையே இதற்கென ஒதுக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் இரண்டு அலைவரிசைகளை இலவச கல்விச் சேவைக்காக ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு காலத்தில் மிகவும் உயர்வாகவிருந்த யாழ்ப்பாணத்தின் கல்வித் தரத்தை மீண்டும் அதே நிலைக்கு உயர்த்தும் நோக்குடன் இந்தக் கல்வி ரிவி என்ற இலவச தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்திருப்பதாக டான் ரிவி பணிப்பாளர் குகநாதன் குறிப்பிட்டார்.
“யாழ்ப்பாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவது வெறுமனே ஆசிரியர்களின் பொறுப்பு என்று இருந்துவிட முடியாது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இதில் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும். தரமான கல்வி வாய்ப்புக்களை அனைவரும் சம அளவில் பெற்றுக்கொள்வதற்கு கல்வி ரிவி வழியேற்படுத்தும்” என்று தெரிவித்த அவர், இதற்கு ஊடகங்களும் தம்மாலான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
“கேபிள் தொலைக்காட்சி சேவையென்பது மாணவர்களின் கல்வியைச் சீர்குலைக்கும் நடவடிக்கை என்று பொதுவாகக் குற்றஞ்சாட்டப்படுவதுண்டு. ஆனால், நாமும் சமூகப் பொறுப்புள்ளவர்கள் என்ற வகையில், யாழ்ப்பாணத்தின் கல்வியை உயர்த்தும் இந்தச் செயற்பாட்டில் இணைந்துகொள்கிறோம்” என்றார், டென் ஸ்ரார் நிறுவன பணிப்பாளர் ரி.இந்திரகுமார்.
தீபாவளி தினமான எதிர்வரும் நவம்பர் 5ம் திகதி முதல் செயற்படத் தொடங்கும் இந்தத் கல்வி ரிவியில், யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர்களின் பாடவிதான ரீதியான கல்வி ஒளிபரப்புக்கள் நடைபெறும் என்றும், டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. சாதாரணதர பரீட்சையையொட்டிய விசேட கல்வி ஒளிபரப்புக்கள் ஆரம்பத்தில் நடத்தப்படும் என்றும்,  டான் ரிவி பணிப்பாளர் திரு.குகநாதன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக