வெள்ளி, 29 அக்டோபர், 2010

இயல்பு வாழ்க்கைக்கு வர அல்லலுறும் விதவைப் பெண்களின் சோக வரலாறு

70 வயதான மூதாட்டி யமுனாதேவிக்கு (இயற்பெயர் அல்ல) வாலிப பருவ எய்திய அவரது 8 பேரப்பிள்ளைகளை பராமரிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற இலங்கையின் சிவில் யுத்தத்தினால் அநாதைகளாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.எனக்கு வேறு வழியில்லை.நானே இவர்களை பராமரிக்கவேண்டும். என்னைவிட்டால் இவர்களுக்கு வேறுயாரும் இல்லை என்கிறார் யமுனாதேவி.வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் யமுனாதேவி. அரசாங்கத்தின் இராணுவ வெற்றியின் மூலம் 2009 ஆம் ஆண்டில் ஒரு முடிவுக்கு வந்த இரத்தக்களறி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யமுனாதேவியின் பேரப்பிள்ளைகளில் நான்கு பேர் அவர்களது பெற்றோரை இழந்தார்கள். மற்றைய நான்கு பேரப்பிள்ளைகளுக்கும் தந்தை மட்டுமே உயிருடன் இருக்கிறார்.தற்போது அவர்தான் குடும்பத்தினர் அனைவருக்கும் சம்பாதிப்பவராக இருக்கிறார்.
எவ்வளவு காலத்திற்கு எனது பேரப்பிள்ளைகளை நான் பாடசாலைக்கு அனுப்ப போகிறேனோ தெரியவில்லை என்று யமுனாதேவி கூறுகிறார். இலங்கையின் முன்னாள் யுத்த வலயத்தில் இவரது இந்த சோகக் கதை சர்வ சாதாரணமானது. பெண்கள்,இளையவர்களோ வயதானவர்களோ தங்களை தாங்களே பராமரித்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சிறுபான்மை தமிழர்களுக்கு தனி நாட்டை அமைத்துக்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்த இந்த யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது இந்தக் குடும்பங்களின் ஆண் உறுப்பினர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போனார்கள்.
யுத்தத்தின் கடைசி காலத்தில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையே சுமார் 3 இலட்சம் பேர் வீடுவாசல்களை விட்டு தப்பி ஓடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 290,000 க்கும் அதிகமான மக்கள் தற்போது சொந்த கிராமங்களுக்கு அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளார்கள்.எவ்வாறாயினும் அவர்களது அவலங்கள் இன்னமும் ஓயவில்லை.முன்னாள் யுத்த வலயங்களில் 20 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட விதவைப் பெண்கள் 89,000 க்கும் அதிகமானோர் உள்ளனர் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார பிரதிஅமைச்சர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போது நாட்டின் கிழக்குப் பிரதேசத்தில் 49,000 விதவைகளும் வடக்கு பிரதேசத்தில் 40,000 விதவை பெண்களும் இருப்பதாக கூறினார். இவர்களில் அநேகமானோர் போரில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களில் மனைவியராவர் என்றும் அவர் கூறினார். பிரதி அமைச்சரின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் சுமார் 25,000 விதவைப் பெண்கள் இருப்பதாகவும் அவர்களில் 8,000 பேரில் ஒவ்வொருவருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்
அயல்நாடான இலங்கையின் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வரும் இந்திய அரசாங்கத்துடன் இலங்கையின் விதவைப் பெண்களுக்கு உதவிபெறுவது குறித்து தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஆனால், சில பகுதிகளில் இப்பெண்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அந்த மாவட்ட அரசாங்க அதிகாரிகளில் ஒருவரான ரூபவதி கேதீஸ்வரன் பெண்களின் தேவைகளை கருத்தில்கொண்டு திட்டங்களை வகுக்காவிட்டால் அவர்கள் கிரமமாக வேலை செய்வதில் கஷ்டங்களை எதிர்ர்நோக்குவார்கள் என்றும் கூறினார்.
பெண்களுக்கு வேலைகிடைத்தாலும் மிக மிகக் குறைவான சம்பளமே அவர்களுக்குக் கிடைக்கிறது.உதாரணமாக கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் புல்லுமலை கிராமத்தை சேர்ந்த 17வயதான ரவீந்திரநாதன் வளர்மதி வாரத்தில் 6 நாட்கள் பால் சேகரிக்கும் தொழிலை செய்து மாதம் ஒன்றுக்கு 17 அமெரிக்க டொலரை சம்பாதிக்கிறார்.யுத்தம் முடிவுக்கு வந்ததும் வாழ்க்கை சுமுகநிலைக்கு திரும்பிவிடும் என்று நினைத்த பலருக்கு இந்த துன்பகரமான வாழ்க்கை தொடர்வதாகவே இருக்கிறது.கணவரையும் இழந்து குடும்பத்தவர்களையும் இழந்து தனிமரமாக நிற்கும் இப்பெண்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்று கிழக்கிலங்கையின் வாகரை பிரிவு அரசாங்க அதிபர் இராசநாயகம் ராகுலநயனி ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். இவர்களுக்கான நிவாரண உதவியும் தாமதமடையும் போது இவர்கள் பல ஆபத்துகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது என்று அவர் கூறினார். யுத்தத்தில் தாமும் தமது தந்தையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
ராகுலநயனி ஐ.பி.எஸ்.ஸிடம் பேசிக் கொண்டிருந்த போது யுத்தத்தின்போது கணவன்மார் காணாமல்போன பெண்கள் தவறவிட்ட அடையாள அட்டைகள் மற்றும் தேவையான ஆவணங்களை பெறுவதற்காக அவரது அலுவலகத்திற்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தார்கள்.ஆண் ஆதிக்க சமுதாய அமைப்புமுறையில் விதவைப்பெண்களும் தனியனான தாய்மாரும் பெரும் துன்பதுயரங்களை அனுபவிக்கிறார்கள் என்று ராகுலநயனி தெரிவித்தார். வழமையாக தமிழ் சமூகத்தினர் மத்தியில் ஆண்கள் குடும்ப விவகாரங்களில் முன்னணி வகிப்போராகவும் பெண்கள் ஆண்களை பின்பற்றுவோராகவும் இருக்கிறார்கள். தற்போது விதவைகளானோர் குடும்ப விவகாரங்களை தாங்களே பொறுப்பெடுத்துக்கொள்வது தனியார் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் அலுவல்களை செய்து கொள்வது உட்பட தீர்மானங்களை எடுப்பதிலும் ஈடுபடுவதால் இப்புதிய பொறுப்புகளை அவர்களால் ஈடேற்ற முடியாதிருக்கிறது.
ராகுலநயனியை காண்பதற்கு காத்துநின்ற இரண்டு பிள்ளைகளின் தாயான 27 வயது சரோஜாதேவி வடக்கில் தங்கள் குடும்பத்தினர் யுத்தத்திலிருந்து தப்பி ஓடியபோது தமது கணவர் காணாமல் போய்விட்டார் என்று கூறினார். அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றியோ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றியோ தமக்கு தெரியாது என்று சரோஜாதேவி கூறினார்.கணவன் காணாமல் போனபின்னர் அவர் பிறந்த இடமான கிழக்கு மாகாணத்தில் வாகரைக்கு அருகில் வசிக்கும் அவரது உறவினரிடம் சென்றார்.தமது கணவர் விடுதலைப்புலிகளுக்கு உதவ மறுத்ததால் புலிகள் அவரை சிறிது நேரம் தடுத்து வைத்திருந்ததாக சரோஜாதேவி தெரிவித்தார். ஷெல் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக தாங்கள் ஓடும்போது கணவர் காணாமல் போனதாக அவர் தெரிவித்தார். நாள் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாங்கள் எவ்வாறு தப்பினோம் என்று தமக்கே தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
மிகுந்த நம்பிக்கையுடன் கணவரை தேடுவதோடு அவரது குடும்பத்தினரை காப்பாற்ற சம்பாதிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள வாகரையில் தொழில் எதுவும் கிடைப்பதில்லை. மீன்பிடிப்பதும் விவசாயம் செய்வதுமே அப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாகும்.தற்போது தாம் தொழில் எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்த சரோஜாதேவி தமது குடும்ப உறுப்பினர்களுக்கு தாம் வயலில் உதவி செய்வதாகவும் அவர்கள் தமக்கு பணம் தருவதாகவும் கூறினார். பட்டினி இருப்பதை தவிர்ப்பதற்காக தமது தங்க நகைகள் அனைத்தையும் தாம் விற்றுவிட்டதாக அவர் மேலும் கூறினார்.
வரிசையில் சரோஜாதேவிக்கு அருகில் நின்றிருந்த 29 வயதான நவுனாத் சுதாவும் தேவியைப் போலவே அவரது நகைகள் அனைத்தையும் நீண்டநாட்களுக்கு முன்னரே விற்றுவிட்டார்.வாகரையில் பிறந்த சுதா வடக்கை சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்தார்.யுத்தத்திலிருந்து தப்பி ஓடும்போது அவரும் கணவரை இழந்துவிட்டார்.ஆனால், சரோஜாதேவியைப் போலல்லாமல் சுதா, 2009 ஆம் ஆண்டு காணாமல் போன தமது கணவர் தற்போது அரசாங்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார்.சில ஆதாரங்கள் கிடைத்ததும் அவரை கண்டுபிடிக்கப் போவதாக அவர் கூறினார். இதற்கிடையில்,தையல் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அரசாங்க அதிகாரிகளின் உதவியை நாடும் சுதாவுக்கு நாளாந்த பிரச்சினைகள் ஒரு சவாலாக அமைந்துள்ளன. பணம் ஏதாவது சம்பாதிப்பதற்காக வீட்டில் தாம் தையல்வேலை செய்வதாக அவர் தெரிவித்தார்.
ஐ.பி.எஸ் -    - தினக்குரல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக