வெள்ளி, 29 அக்டோபர், 2010

வரதட்சணை கொலைகளுக்கு மரண தண்டனை!



உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கீதா என்ற பெண் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அவரது மாமியார் மற்றும் கணவரால் தீவைத்துக் கொளுத்தப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

வரதட்சணை கொடுமையால் கீதா கொலை செய்யப்பட்டதாக கணவர் சத்யநாராயண் மற்றம் அவரது தாயார் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கில் பஞ்சாப் ஐகோர்ட் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாயும் மகனும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் ஜி.எஸ்.மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் விசாரித்து, இருவருக்கும் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
வரதட்சணை கொலைகளை மிக மிக அரிதான கொடிய கொலை குற்றமாக கருதி மரண தண்டனை விதிக்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து நீதிபதிகள்,
’’வரதட்சணை கொலைகள் சமூக குற்றங்களாகும்.

ஒட்டுமொத்த சமுதாயத்தை சீர்குலைப்பதாகும். நமது சமூகம் வர்த்தக மயமாகிவிட்டது. பணத்தின் மீதுள்ள பேராசை, மனைவியை கொலை செய்யும் அளவுக்கு கொண்டுபோய் விடுகிறது. இந்த தீய பழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
வரதட்சணை கொலைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இத்தகைய குற்றங்கள் அரிதான குற்றங்களாக இல்லாவிட்டாலும் அதன் கொடூரம், பயங்கரம் கருதி வரதட்சணை கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம்’’என்று தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக