திங்கள், 18 அக்டோபர், 2010

பிரிட்டனில் இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

பிரிட்டனில் ரவுடி கும்பலிடம் இருந்து இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற இந்தியர் மீது அந்த கும்பல் காட்டுமிராண்டித்தனமாக இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.

நடு ரோட்டில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கும்பலை தட்டிக் கேட்ட பங்கஜ் ராவத் என்ற இந்தியரை 5 பேர் கொண்ட ஸ்காட்லாந்து ரவுடி கும்பல் அடித்து உதைத்து எலும்புகளை உடைத்துள்ளது.

 பங்கஜ் ராவத் என்ற இந்தியர் ஸ்காட்லாந்தில் எடின்பர்க் நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் சனிக்கிழமை இரவு வெளியில் சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது.

 இதை பார்த்த பங்கஜ் ராவத், அந்த பெண்ணை கும்பலிடம் இருந்து காப்பாற்ற முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ரவுடி கும்பல் அவரை இன ரீதியாக விமர்சித்ததுடன் கடுமையாக அடித்து உதைத்தது. இதில் பலத்த காயம் அடைந்த ராவத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இது குறித்து ராவத் கூறியது: "இளம்பெண்ணை அந்த கும்பல் கையை பிடித்து இழுத்து பலவந்தப்படுத்தியது.

 நான் அந்தபெண்ணை காப்பாற்ற முயன்றேன். என்னிடம் நீ யார்? எந்த நாட்டுக்காரன்? என்று அந்த கும்பலில் இருந்த ஒருவர் கேட்டார். நான் இந்தியன் என்றேன். உடனே என்னை கேலி செய்து இன ரீதியாக விமர்சித்ததுடன் முரட்டுத் தனமாக தாக்கினர். உடன் இருந்த என்னுடைய நண்பரால் அந்த கும்பலை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.

 என்னை பார்த்து எந்த நாட்டுக்காரன் என்று கேட்டனர். இதன் மூலம் இது இனவெறித் தாக்குதல்தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகிறது. கடந்த ஆண்டு நான் ஸ்காட்லாந்துக்கு வந்தேன். வந்தது முதலே இன ரீதியாக பலர் கேலி செய்துள்ளனர்.

 இந்த தாக்குதலால் இப்போது என் தாடை எலும்புகள் உடைந்து விட்டன. உள்ளே உலோகம் பொருத்தப்பட்டுள்ளது. எனக்கு வலி அதிகமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக