புதன், 6 அக்டோபர், 2010

தமிழ் கட்சிகளும் வடமாகாணசபைத் தேர்தலும்

என்.சத்தியமூர்த்தி
அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்தலாம் என்ற செய்தி அறிக்கைகள் எதிர்பார்க்கப்படாததல்ல.
மிகமோசமாக பிளவுபட்டுள்ள சிறுபான்மைக் கட்சிகளிடையே ஒரு பரந்த புரிந்துணர்வை கொண்டுவரும், குறிப்பாக இலங்கைத் தமிழர் சமூகத்தின் எந்த முயற்சியும் நாட்டின் ஆளும் வர்க்கத்திலும் கிட்டத்தட்ட இதையொத்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இந்த நிலையில் தமிழ்க் கட்சிகளும் சமூகமும் பொறுப்புணர்வோடும் நடைமுறை சார்ந்ததாகவும் செயற்பட வேண்டும். அரசியல் சாத்தியப்பாடுகளின் விளையாட்டாகும். தேர்தல்கள் எண்கள் சார்ந்த விளையாட்டாகும். மன வெழுச்சிகளும், உணர்ச்சிகளும் அரசியல் வகுப்பினரையும், இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் இயங்க வைக்கவேண்டும். ஆனால், அவர்களின் தீர்மானங்கள் மனவெழுச்சி சார்ந்ததாகவோ, அல்லது மனவெழுச்சிகளை கவர்வதாகவோ இருக்கக் கூடாது. தீர்மானங்கள் யதார்த்தம், உணர்ச்சிவசப்படாத கணிப்பு என்பவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இப்படியான வேளையில், தமிழக் கட்சிகள் தமது மக்களுக்கு தமது கடமையைச் செய்யத் தவறியிருக்கலாம். சமுதாயத்திற்காக தீர்மானங்களை எடுக்கும்போது இவர்கள், தாம் சமுதாயத்திற்கு வழிகாட்டாமல் சமுதாயத்தின் பின்னே சென்றனர். இவ்வாறு நடந்ததனால், மக்களை நம்பவைக்கவும், தம்மோடு இட்டுச் செல்லவும் இவர்களுக்கு ஒரு திட்டம் இல்லாது போயிற்று.
மாறாக, இது நாட்டில் ஒரு பரந்த தமிழ் தீவிரவாதத்துக்கு இட்டுச் சென்று தமிழ் தீவிரவாத இயக்கங்கள், பழைய அரசியல் தலைமைகளை குறிவைக்கவும், ஒன்றை ஒன்று அழித்துக் கொள்ளவும், இலங்கை அரசையும் சிங்கள பெரும்பான்மையினரை தாக்கவும் ஒரு தவறான காரணத்தை உருவாக்கியிருந்தது. சண்டை முடிந்த நிலையிலும் இலங்கை தமிழ் சமுதாயமும், அச்சமுதாயத்தின் அரசியல் சமூகமும் முன்னைய நிலையிலேயே காணப்படுகின்றன.
இந்தப் பின்னணியில், மிதவாத தமிழ் தேசிய கூட்டமைப்பும் வளர்ந்து வரும் ஆயினும் பெரிதாக நிச்சயமில்லாத தமிழ் கட்சிகளின் அரங்கமும், விரைவில் வரவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை அரசும் சிங்கள சமூகமும் தமிழ் அரசியல் சமூகத்தை தமிழ் மக்களையும் அரவனைத்து செல்ல வேண்டியுள்ளது போலவே, தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சமூகமும் சிங்கள சமூகத்திற்கு தமது புதிய தெரிவுகளையும் மனமாற்றத்தையும் தெளிவுபடுத்த வேண்டும்.
இது எல்லாமே பரஸ்பர விட்டுக்கொடுப்பு சார்ந்தவையே.
அரசியலிலும், அரசாள்வதிலும் எதுவுமே சும்மா கிடைக்காது. சண்டைக்குப் பிந்திய தமிழ் தலைமைத்துவத்தின் மீது இலங்கை அரசு நம்பிக்கைகொள்ள வைப்பதற்கு, தமிழ் தலைமைத்துவம் தாம் எல்.ரி.ரி.ஈ. யினரின் 'பாவங்களிலிருந்து' விலகியுள்ளனர் என்பதையும் ஐம்பதுகளின் நடுவில் இல்லாதுவிட்டாலும், எண்பதுகளின் நடுவில் விட்ட இடத்திலிருந்தாவது, புதிதாக ஆரம்பிக்க தயாராக இருப்பதையும் வெளிப்படுத்த  வேண்டும்.
 இன யுத்தத்தில் எல்.ரி.ரி.ரி.யும் அதன் தலைமைத்துவமும் அழிந்துபோனாலும், எல்.ரி.ரி.ஈ.யினால் அழித்தொழிக்கப்பட்டவர்களை தவிர தமிழ் சமுதாயத்தின் மிதவாத அரசியல் தலைமைத்துவம் அழிந்து போகாமல் உள்ளது. யுத்தம் அறுதியாக முடிந்த நிலையிலும், அரசியல் ஆதிக்கம் பெற்ற பகுதியினர் ஆகியோரின் பார்வையில் இது பிரச்சினையாகவும் உள்ளது. இவர்கள், இதை எல்.ரி.ரி.ஈ. காலத்தின் நிழலாகக் காண்கின்றனர். இது சரியாக இருக்க வேண்டுமென்றில்லை.
இன யுத்தம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் ஐக்கிய இலங்கைக்கு ஆதரவாகவுள்ளோம் என்பதை பெரும்பான்மை சமூகத்தை நம்பவைக்கும் அளவுக்கு எதையும் பேசவோ சொல்லவோ இல்லை. இதன் பொருள் அவர்கள் கடந்த இரண்டு தேர்தல்களிலும் மற்றும் பிரச்சினைக்குரிய 18 ஆவது திருத்தத்திலும் ஜனாதிபதி ராஜபக்ஷவையும் அவரது கட்சியையும் ஆதரித்திருக்க வேண்டும் என்பதல்ல. முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கடந்த இரண்டு தேர்தல்களிலும், 18 ஆம் திருத்தத்திலும் அரசாங்கத்தை ஆதரித்தபோது அவை தமது வாக்காளர்களின் எண்ணத்தை பிரதிபலித்தார்கள் என்றும் இல்லை.
இவர்கள் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருந்தப் போதும் அப்போதைய சிங்கள ஆதிக்க அரசாங்கங்களை ஆதரித்தார்கள் என்பதும் எதையும் முடிவாக சொல்லவில்லை.
உண்மை இடையில் காணப்படுகிறது. அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என்பவை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அல்லது முன்வைக்கப்படாத பல வகைப்பட்ட ஆலோசனைகளையிட்டு ஏதாவது உருப்படியான கருத்துக்களை கூறுவதனால் சகல தமிழ்க்கட்சிகளும் காலத்தின்  யதார்த்தத்திற்கு முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும். இது அவர்களது தற்போதைய மற்றம் எதிர்கால ஆலோசனைகளுக்கும் பொருந்தும்.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சரியோ பிழையோ, தமிழ்தேசிய கூட்டமைப்பு யுத்தம் முடிவுற்றபின் தாம் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வேலைசெய்வதாக செய்த பிரகடனத்தை, இலங்கை அரசாங்கத்தின் கடும் போக்காளர்களும் சிங்கள சமூகமும் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயமாக நினைக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடத்தில் ஒரு தயக்கத்தை காண்கின்றனர். அவர்கள் தந்திரோபாய ரீதியாக இப்படி அறிவித்ததாகவும் மனப்பூர்வமாக ஒரு மிதவாத நிலைக்கு இன்னும் வரை வில்லை எனவும் கருதுகின்றனர்.
எல்.ரி.ரி.ஈ.யினரின் இலட்சியத்துக்கும் அவர்கள் பயன்படுத்திய முறைகளுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு என தமிழ் சமூகம் குழப்பமடையக்கூடாது.
ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுவார்த்தை மூலம் பெறப்படும் ஒரு தீர்வை நேர்மையாக ஏற்று நடக்கக்கூடிய மனப்பாங்கை எல்.ரி.ரி.ஈ. காட்டியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். நடந்தவற்றை அவதானிக்கும் போது எல்.ரி.ரி.ஈ. வெளிநாட்டு நிர்ப்பந்தம் காரணமாக பேச்சுவார்த்தைக்கு போன சந்தர்ப்பத்தைவிட இவர்களது  பேச்சுவார்த்தை ஈடுபாடு கூடுதலான தந்திரோபாயத்தையே காட்டுகிறது.
எல்.ரி.ரி.ஈக்கும் அதன் பிரிவினை இலட்சியத்திற்கும் எதிரான நிலைப்பாட்டில் டக்ளஸ் தேவானந்தா போன்றோர் ஓர் உறுதித் தன்மையை காட்டிவருகின்றனர். தற்போது தமிழக்கட்சிகளின் அரங்கம் அமைத்த நிலையில், அது, வடக்கு கிழக்கு முதலமைச்சர் என்ற வகையில்  ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் வரதராஜப் பெருமாளினால் முன்னெடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான தனிநாட்டு பிரகடனம் பற்றிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டும். அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளரான, மறைந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகனான எஸ்.சி. சந்திரஹாஸன் வட்டுக்கோட்டைப்  பிரகடனம் பற்றிய அவரது நிலைப்பாட்டுக்கு விளக்கமளிக்குமாறு கோரப்படுவார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும்  அதையே பற்றிக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுப்பது என்பது தமிழ்க்கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரே மாதிரியான விடயமாகவே இருக்கும். வடமாகாண சபைத் தேர்தல்கள் நெருங்கி வரும் இந்த வேளையில் இவர்கள் இந்த பிரச்சினைகளை தீர்த்தால்தான், நேர்மையானதாக தோன்றக்கூடிய தெளிவான ஆலோசனைகளை முன்வைக்கவும் அதை தெளிவுபடுத்தவும் இவர்களால் முடியும்.
உள்நாட்டில் உள்ள அல்லது புலம்பயர்ந்த தமிழ் அரசியல் சமூகத்தின் முதுகெலும்பாக உள்ள யாழ்ப்பாண, நடுத்தர வர்க்கம் விடயங்களை தமது கடந்த கால அனுபவத்திலிருந்து மட்டும் பார்க்காமல், தற்போது காணப்படும் யதார்த்தத்தையும் கருத்திலெடுக்க வேண்டும். கடந்த காலத்திலேயே ஊறிப்போயிருந்த கருத்துகளின் அடிப்படையில் அமைந்த அரசியல் அறிவின் பின்னணியில் நிலைமைக்கேற்ப சமூகத்திற்கு நல்லதை செய்ய அவர்கள் தமது அரசியல் தலைமைத்துவத்தை சுயாதீனமாக இயங்கவிட வேண்டும்.
இவ்வாறு செய்வதனூடாக, தமிழ் அரசியல் சமூகமும், தமிழ் சமூகமும், தசாப்தங்களாக இழுபட்ட ஒரு பிரச்சினைக்கு, உடனடி தீர்வு காண முடியாது என்ற எடுகோளில் வேலை செய்ய வேண்டும். தமிழ் சமூகத்தின் எதிர்ப்புகளும் யுத்தமும் காலத்துக்குக் காலம் வீரியங் கொள்வதும் விழுவதுமாக இருந்தது போலவே சமாதான தீர்வும் சிறிது சிறிதாக தவணை முறையில்தான் வரமுடியும். முதலில், கிடைப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கூடுதலானவற்றையும் பெற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது தசாப்தங்களாக நீண்டு போகலாம். ஆட்சியாளர்களுக்கு முத்திரை குத்துவதும், இல்லாத வாளை சுழற்றியடிப்பதும் சமூகத்துக்கு எதையும் சாதிக்கப்போவதில்லை. இல்லையென்றால் அழிவைத் தந்ததும் தவிர்க்க முடியாததுமான யுத்தம் முடிந்த பின்னும் அதே பிழையையே அவர்களும் செய்துகொண்டிருப்பர்.
நன்றி: தமிழ்மிரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக