சனி, 16 அக்டோபர், 2010

புலிகளின் இரகசிய முகாம் ஒன்று மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு!!

மட்டக்களப்பு தொப்பிகலை பிரதே சத்தின் அலியாஓடை பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்ட இரகசிய முகாம் ஒன்று அமைந்துள்ளதாக விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
புலிகளால் குறித்த முகாமுக்கு  ‘போ சிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது.  விடுதலைப் புலிகள் கிழக்கில் பலமாகச் செயற்பட்ட காலத்தில் அந்த முகாம் அருணா,  குமாரப்பன்,  நியூட் டன் மற்றும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘போ சிக்ஸ்’  முகாமில் ஏராளமான புலி உறுப்பினர்கள் தங்கியிருந்ததுடன் முகாமிலும் அதனைச் சுற்றிய பகுதியிலும் பெருமளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் விசேட அதிரடிப்படை புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு மேலாக முகாமைச் சுற்றிலும் கொடிய முதலைகளைக் கொண்ட நீர் அகழி அமைந்திருப்பதன் காரணமாகவும் அப்பிரதேசத்தில் காணப்படும் மலைக்குகைகள் காரணமாகவும் கிழக்கை விடுவிக்கும் இராணுவ நடவடிக்கையின் போது  இராணுவத்தினரால் குறித்த முகாமை கைப்பற்ற முடியாது போயிருந்தது.
ஆயினும் அரசாங்கம் அதனை வெளிக்குத் தெரியாவண்ணம் மூடிமறைத்திருந்தது.     புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து குறித்த முகாமில் இருக்கும் புலி உறுப்பினர்களுடன் அரசாங்கத்தின் இன்றைய பிரதியமைச்சர் ஒருவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தற்போது அவர்கள் அனைவரும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதாகவும் அதிரடிப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் உட்பட கிழக்கில் அரச ஆதரவுடன் செயற்படும் ஆயுதக் குழுக்களுக்கும் அங்கு வைத்தே ஆயுதப் பயிற்சியளிக்கப்படுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘போ சிக்ஸ்’ முகாம் தொடர்பான தகவல்கள் கசியத் தொடங்கிய காரணத்தால் அப்பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த விசேட அதிரடிப்படையினரை விலக்கி விட்டு அப்பிரதேசத்தை முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் உடனடி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகின்றது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக