தமிழ்ச் சினிமாவிற்கு புது இலக்கணம் வகுத்தவர் என்றால், அது இயக்குனர்களின் சிகரமாக போற்றப்படும் கே. பாலசந்தர் எனலாம். அவர் காலத்துக்கு முந்தைய வழக்கமான சினிமாவின் போக்கை மாற்றியவர். பாரதி ராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் முதல் இன்றைய பாலா, அமீர், சசிக்குமார் வரை அனைவருமே பாலசந்தரை தங்களின் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இன்றைய இளம் இயக்குனர்களும் சினிமாவில் புதுமையை புகுத்துவதற்கு முன்னோடி பாலசந்தர்தான். கமல், ரஜினிகாந்த் போன்றவர்களும் “தங்களை உருவாக்கிய ஆசான்” என்று பாலசந்தரை இன்றுவரை கொண்டாடி வருகிறார்கள்.
தனக்கென தனி வழியை ஏற்படுத்தி அதை பிறரும் பின்பற்றும்படி சிகரமாக இருக்கும் பாலசந்தர் இன்றைய சினிமாவின் நிலைக்குறித்த தனது எண்ணத்தை ஆவேசத்தோடும், அக்கறையோடும் வெளிப்படுத்தினார்.
தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவை ‘டி - 20’ என்றப் பெயரில் வரும் 23ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக கொண்டாட விருக்கிறார்கள். இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்தது. இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா, செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பாலசந்தர், பாலுமகேந்திரா, பார்த்திபன், விக்ரமன், சசிக்குமார், கௌதம் மேனன் உள்ளிட்ட 200 இயக்குனர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இன்றைய சினிமா குறித்த தனது கருத்துக்களை பகிந்து கொண்டார் பாலசந்தர். அப்போது அவர் ‘தமிழ் சினிமா இன்று கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது’ என ஆவேசப்பட்டார்.
"இங்கு வந்திருக்கும் இயக்குனர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் !. சினிமாவில் இனிவரும் காலம் இயக்குனர்களின் காலம் என மாறவேண்டும். இயக்குனர்கள் சொல்லியது தான் வேதம். இயக்குனர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை உருவாகவேண்டும்.
ஜெமினி கணேசனை வைத்து நான் இயக்கிய ஒரு படத்தில் “என்னம்மா” என்ற ஒரே வார்த்தையை சொல்வது மட்டுமே ஒரு ஷாட்டாக வைத்திருந்தேன். அந்த வசனத்தை மட்டும் ஜெமினி பேச வேண்டும். அத்துடன் அவருக்கான அன்றைய ஷாட் முடிந்தது.
‘நான் போகட்டுமா’ என்று கேட்ட ஜெமினியை என்னருகில் உட்காரவைத்து மற்றவர்கள் நடிப்பதை கவனிக்கச் சொன்னேன். அப்போது ”என்னம்மா” என்ற வார்த்தையை நான் சொல்லி நடிக்கிறேன் அதே மாதிரி அப்படியே உங்களால நடிக்க முடியுமா ? என்று தமாசாக கேட்டேன். ஒரு முன்னணி ஹீரோகிட்ட அப்படி நான் கேட்கிற அளவுக்கு அந்தக் காலத்தில் எனக்கு சுதந்திரம் கிடைத்தது.
அப்படி இப்போ இருக்கும் ஹீரோக்களிடம் இன்றைய இயக்குனர்கள் கேட்க முடியுமா?. அப்படி கேட்கக்கூடிய குரு - சிஷ்யன் என்னும் உறவு முறை இன்று இயக்குனர், நடிகர் இடையே இருக்கிறதா?.
இன்று தங்களுக்கான ஷாட் முடிந்தவுடன் கிளம்பிப் பேய் விடுகிறார்கள். அப்படி இல்லாமல் மற்றவர்கள் நடிப்பதையும் கவனிக்க வேண்டும். அப்போது தான், நடிப்பவர்களுக்கு அந்தப் படத்தில் ஒரு ஈடுபாடு ஏற்படும்.
இது போக, இப்போது நடிப்பவர்கள் அவர்களே வசனங்களை உள்வாங்கி கொண்டு பேசுவதில்லை. உதவி இயக்குனர்கள் சொல்ல சொல்ல நடிகர்கள் சொல்லும் “பிராம்ட்” என்னும் முறைதான் இன்று பின்பற்றப்படுகிறது.
ஒரு வசனத்தை நடிப்பவரே பேசும் போதுதான், அவர்கள் சரியாகத்தான் நடிக்கிறார்களா ?! என்பது தெரியும். அப்படி இல்லாமல், ‘பிராம்ட்’ முறையில் இவர் பேசுவதற்கு முன்பே இன்னொருவர் அந்த வசனத்தை பேசிவிடுவதால் அந்த வசனத்திற்கான சரியா உணர்வு வெளிப்பாட்டை இவரிடமிருந்து நம்மால் பெறமுடியாது. இதை விட கேவலம் இயக்குனர்களுக்கு வேற எதுவும் இல்லை. இந்த நிலை மாறவேண்டும்.
மேலும், ஒரு கடல் பயணத்தில் ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’ என்று சொல்வதைப் போல, சினிமாவில் இயக்குனர்கள்தான் ‘கேப்டன்’ என்ற நிலை உருவாகவேண்டும். இயக்குனர்களின் காலம் என்னும் போது, இயக்குனர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று பிறர் சொன்னாலும் பரவாயில்லை. அப்படி ஆதிக்கம் செலுத்தும் போது நீங்கள் எல்லாம் தவறாக சிந்திக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அதனால், இயக்குனர்கள் சங்க 40 வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் இதற்கான ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும். இனிவரும் காலம் இயக்குனர்களின் காலமாக மலர வேண்டும்.” என்று தனது ஆதங்கத்தை ஆலோசனையாக தெரிவித்தார் இயக்குனர் சிகரம் கே.பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக