வியாழன், 28 அக்டோபர், 2010

கருணாநிதியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ,தொழிலாளர்கள் பிரச்சனை

சென்னை: முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களான டி.கே.ரங்கராஜன் எம்பி, செளந்தரராஜன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று இச் சந்திப்பு நடந்தது.

நெய்வேலி தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதல்வர் கருணாநிதி நேற்று தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அப்போது வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இந் நிலையில் அவரை மார்க்சிஸ்ட் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இச் சந்திப்புக்குப் பின் ரங்கராஜன் நிருபர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் இயங்கக்கூடிய ஹூண்டாய், பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நிலவும் பிரச்சனைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அதேபோல நெய்வேலி சுரங்கம் மற்றும் மின் நிலைய தொழிலாளர் பிரச்சனை குறித்தும் பேசினோம்.

பொதுவாக, தமிழகத்தில் தொழில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதற்கான ஒரு சட்டத்தை உடனே கொண்டு வரவேண்டும் என்று முதல்வரிடம் கோரினோம். அதை அவரும் கனிவுடன் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

நெய்வேலி தொழிலாளர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு கருதுகிறது. அதே உணர்வோடுதான் நாங்களும் இருக்கிறோம். நல்ல முடிவு வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பல சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன. அதே சமயத்தில் பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளவே அனைத்துச் சங்கங்களும் விரும்புகின்றன.

தமிழக அரசும் நெய்வேலி நிர்வாகத்தோடு பேசுகிறோம் என்று சொல்லியிருக்கிறது. எனவே, சுமூகத் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றார்.

கூட்டணி தொடர்பாக ஏதாவது பேசினீர்களா என்று கேட்டதற்கு, அரசியல் சம்பந்தமாக எதையும் நாங்கள் பேசவில்லை என்றார் ரங்கராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக