சனி, 9 அக்டோபர், 2010

ரஞ்சிதா :மிகப்பெரிய சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது

ஞ்சிதா.இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தெளிந்த மனதுடன் இருக்கிறார். ‘‘இந்த சர்ச்சையில் எந்த உண்மையும் இல்லை.

என்னைப் பற்றிய தப்பான செய்திகளைப் பார்த்தபோது என் உச்சந்தலையில் விஷம் ஏறியது போல் இருந்தது.பரபரப்பை கிளப்புவதற்காக என் பிரச்சனையில் மீடியா பல கதைகளை கிளப்பிவிட்டு விட்டது’’ என்கிறார். சர்ச்சைகளுக்குப் பிறகு பத்திரிகைக்குத் தரும் முதல் பேட்டி இதுதான். கேள்விகளை மின்னஞ்சல் மூலம் பெற்று பதில் தந்தார்.

தற்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது?

“ஒரு மிகப்பெரிய சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது.

அதிலிருந்து மீண்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. எதிர்பாராத புதிய சவால்கள்  நம்மை நாமே அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. அந்த சூறாவளிக்குப் பிறகும் என் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.புத்தகங்கள் வாசிப்பது, மனதில் தோன்றுகிற கருத்துக்களை எழுதுவது, பயணங்கள் மேற்கொள்வது என்றிருக்கிறேன்.’’
உங்களைச் சுற்றி திடீரென சர்ச்சைகள் கிளம்பியபோது உங்கள் கணவர் என்ன சொன்னார்? அவர் உங்களைப் புரிந்து கொண்டாரா?


“என் கணவர் ஒரு மிகச் சிறந்த மனிதர்.  நான் இன்றைக்கு இருக்கும் இந்த கசப்பான கால கட்டத்தில் என்னை முழுமையாகப் புரிந்துகொண்டு, எந்தெந்த விதத்தில் எல்லாம் எனக்கு ஆதரவாக இருக்க முடியுமோ அவ்வளவு ஆதரவாக,அக்கறையோடு என்னைப் பார்த்துக்கொள்கிறார். எந்த சூழ்நிலையையும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கிறார்.’’

உங்களுடைய குடும்பத்தினர் இந்த சர்ச்சையை எப்படி எடுத்துக் கொண்டார்கள்? அவர்களிடமிருந்து எந்த மாதிரியான ஆதரவு கிடைத்தது?
“என்னுடைய அப்பா, அம்மா மற்றும் சகோதிரிகள் எனக்கு மிகப் பெரிய பலத்தையும், தைரியத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் ஆன்மிகப் படிப்புகளும் எனக்கு சக்தியைக் கொடுக்கின்றன. எங்கள் குடும்பத்தில் எல்லோருமே மனதளவில் காயம்பட்டிருக்கிறார்கள். அதே நேரம் என்னைச் சுற்றி நிகழ்ந்த சர்ச்சைகளை அவர்கள் மிக முதிர்ச்சியுடன் கையாண்டார்கள்.என் குடும்பம் இல்லை யென்றால் இந்த பிரச்னையை எப்படிச் சமாளித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.பொதுவாகவே எங்களுக்குள் அன்பு அதிகமுண்டு.இந்த சம்பவங்களால்  நாங்கள் இன்னும் மிக நெருக்கமாகிவிட்டோம்.  என் பெற்றோர், சகோதரிகள் என்மீது அன்பு காட்டுவது யதார்த்தமான விஷயம்.ஆனால் என் அத்தை (மாமியார்) எனக்குக் கொடுத்த ஆதரவும், அன்பான வார்த்தைகளும் உண்மையிலேயே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்.என் அத்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்.’’

ஏன்நடிகையானோம், ஏன் பிரபலமானோம்... இப்படி வருத்தப்பட்டதுண்டா?

“ஒரு நடிகையாக வேண்டுமென்று நான் என்றைக்கும் ஆசைப்பட்டதும் இல்லை. நடிப்பு நானாகப் போய் தேடிக் கொண்ட தொழிலும் இல்லை.

இன்று அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. ஆனால் சமீபத்திய சம்பவம் மூலம் ஒரு நடிகை அல்லது பிரபலமாக இருப்பவர்கள் மிகவும் சுலபமாக பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை  உணர வைத்திருக்கிறது. சினிமா சாராத ஒரு சாதாரணப் பெண் இதே போன்ற சர்ச்சையில் சம்பந்தப் பட்டிருந்தால் மீடியாவின் கரம் இவ்வளவு கடுமையான இரும்புப்பிடியாக இருந்திருக்காது என்று நம்புகிறேன்.

நம்முடைய வாழ்க்கை ஒரு நாணயம் மாதிரி. அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.இதுவரையிலும் வாழ்க்கையின் நல்ல பக்கத்தையே அனுபவித் திருக்கிறேன்.இப்போதுதான் அதனுடைய அடுத்த பக்கத்தையும் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறேன்.என்னுடைய வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். நடிகைகளும் உங்களைப் போல் மனிதர்கள்தான். உங்கள் வீட்டுப் பெண்களைப் போன்ற பெண்கள்தான்.வானத்திலிருந்து தானாக குதித்துவிடவில்லை.உங்களைப் போல் நடிகைகளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. தயவுசெய்து அதை மறந்துவிடாதீர்கள்.’’

பிரச்னைகள்,சர்ச்சைகளுக்கு மத்தியில் உங்களையும் மனதையும் அமைதியாக அதே நேரம் நிதானமாக செயல்பட வைத்தது எது?

“என்னைப் பொருத்தவரை  மூன்று விஷயங்களில் மிகத்தெளிவாக இருக்கிறேன். ஒன்று, எந்த சம்பவத்தாலும் நான் பாதிக்கப்படக்கூடாது.

இரண்டாவதாக  யாராலும் என் மனமோ, எண்ணமோ பாதிக்கப்படக்கூடாது.

மூன்றாவதாக  என்மீது வேறு யாரும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. இந்த மூன்று விஷயங்களால்தான் என்னால் இன்றும் கண்கள் அயர்ந்து நன்றாக தூங்கமுடிகிறது.நடந்தது எல்லாம் நல்லதுக்குதான்.என்னுடைய வாழ்க்கையில் நடக்கின்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் அது என்னுடைய அனுகூலமான,நல்ல நேரத்திற்காகவே நடக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு.சமீபத்திய சம்பவம்கூட நான் ஒரு படி முன்னேற உந்துதலாக இருக்குமென நம்பு கிறேன்.அதனால் இதை ஒரு பாஸிட்டிவான சவாலாகத்தான் நினைக்கிறேன்.’’

 கர்மா, ஆத்மா இவற்றின் மீது உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதா? உங்களது வாழ்க்கையில் இவற்றை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

”கர்மா, ஆத்மா, மறுபிறவி இந்த மூன்றுமே இந்தியாவில் எல்லோருடைய அன்றாட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அடிப்படையில் உறவாடுகிற விஷயங்கள். என்னுடைய பர்ஸனல் வாழ்க்கையைப் பொருத்தவரை முடிவே இல்லாத மாபெரும் சக்தி ஒன்றுதான் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. நான் நடிகை யானதிலிருந்து, என் வாழ்க்கையில் நடந்த பெரும்பாலான பர்ஸனல் விஷயங்கள் எதுவுமே நான் திட்டமிட்டபடி நடந்தது இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்னுடைய கர்மா என்பதை உணர்ந்திருக்கிறேன்.”

 ஆன்மிக வாழ்க்கையில் உங்களை ஈடுபட வைத்தது எது? ஏன்?

“நான் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டதால் ஆன்மிகத்தில் இறங்கினேன் என்று நினைக்கிறார்கள்.வாழ்க்கையில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது.எனக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கிறது.அதனால் வருத்தப்பட்டும் இருந்திருக்கிறேன்.ஆனால் மன அழுத்தத்தினால் நான் ஒருபோதும் பாதிக்கப்பட்டது இல்லை.குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம்தான்.’’

 இந்த சர்ச்சையினால் நீங்கள் மாறியிருக்கிறீர்களா?

“இந்த சம்பவத்திற்குப் பிறகும் நான் அப்படியேதான் இருக்கிறேன்.

மாறவில்லை. இன்றும் எனது புத்தக வாசிப்பு தொடர்கிறது. தினமும் ஐந்து மணிநேரம் தூங்குகிறேன்.எல்லாமும் அப்படியே இருக்கிறது.ஆனால் மக்கள் மத்தியில் நான் மாறிவிட்டேன் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.என் மீதான பார்வையில் வித்தியாசம் ஏற்பட்டு இருப்பது புரிகிறது. ஆனால் இதே போன்ற சம்பவங்கள் நடப்பது எனக்கு இது முதல் முறை அல்ல.நான் நடிக்க ஆரம்பித்தபோது நெருங்கிய சொந்தங்கள்,நண்பர்கள் என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார்கள்.சினிமா ஒரு நல்ல துறையாக,மதிக்கக்கூடிய தொழிலாக அவர்களுக்குத் தெரியவில்லை.

பிறகு நடிகையாக நான் பெயர்,புகழ் பெற்ற பிறகு அதே நண்பர்கள், உறவினர்கள் அதே சினிமாவினாலேயே என்னிடம் நெருங்கி வந்தார்கள். இது வட்டம் மாதிரி.இதே வட்டம். இன்றும் வேறு விதமாக தொடர்கிறது.’’

 மீண்டும் நடிக்க வரும் எண்ணமிருக்கிறதா?

“எதிர்காலம் நம் கையில் இல்லை. காலத்திற்கு ஏற்றபடி அது மாறிக்கொண்டே இருக்கும்.உண்மையில் உங்கள் கேள்விக்கான பதில் என்னிடம் இப்போது இல்லை.’’

பரபரப்பை கிளப்பிய அந்த சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் நித்யானந்தரைச் சந்தித்தீர்களா?

“நான் அவரைச் சந்திக்கவில்லை.’’.
இரா. ரவிஷங்கர்படங்கள் : ஆர். கோபால்அட்டைப்படம் - சித்ராமணி
www.kumudam.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக