திங்கள், 1 நவம்பர், 2010

வடமாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்க வைக்க துரித கதியில் ஏற்பாடு

.வடக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தற்போது திருகோணமலையில் இயங்கும் மாகாண சபையைக் கிளிநொச்சிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கமைய மாகாண சபையின் சில திணைக்களங்கள் கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டிருந்த போதும் அனைத்து திணைக்களங்களையும் அவற்றின் அலுவலகங்களையும் கிளிநொச்சியில் இயங்கச் செய்வதற்குரிய போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வடக்கு மாகாண சபையைக் கிளிநொச்சியில் இயங்க வைப்பதில் சிக்கலான நிலை தோன்றியது. வடக்கின் தலைநகராக மாங்குளம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு மாகாண சபையை இயங்க வைப்பதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நீண்டகாலம் செல்லுமென்பதாலும் வடக்கு மாகாண சபைக்கு அடுத்த வருட முற்பகுதியில் தேர்தலை நடத்த அரசு உத்தேசித்துள்ளதால் தேர்தலின் பின் தொடர்ந்தும் மாகாண சபையைத் திருகோணமலையில் இயங்கவைக்க முடியாதென்பதாலும் தற்போதைக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் பணிப்புரைக்கமைய மாகாண சபையை யாழ்ப்பாணத்துக்கு மாற்றும் நடவவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ்.மாநகர எல்லைக்குள் வட மாகாண சபையின் அனைத்துத் திணைக்களங்களும் அலுவலகங்களும் செயற்படும் விதத்தில் கட்டிடங்கள் தெரிவு செய்யப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே இதற்காக சில கட்டிடங்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டதாகவும் மிக விரைவில் வடமாகாண சபை யாழ்ப்பாணத்தில் இயங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக