சனி, 9 அக்டோபர், 2010

பொன்சேகா விவகாரம்; ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் தீர்ந்துவிடும் : பிரதமர் டி.எம். ஜயரட்ன

சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சட்டபூர்வமானதாகும். சிவில் சட்டத்தை மீறியது தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தண்டனையை மாற்ற சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாதென பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று  சபையில் தெரிவித்தார். சரத் பொன்சேகா விடயத்தில் தவறான வழிகளைப் பின்பற்றாது ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினால் இந்தப் பிரச்சினை இலகுவாக தீர்ந்துவிடும் எனவும் அவர் கூறினார்.
ரவி கருணாநாயக்க எம்.பி முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன் வைத்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது; இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டபூர்வமானதாகும். பாராளுமன்றத்தினுள் மேற்கொள்ளப்படும்
நடவடிக்கைகள் தொடர்பிலே சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. சாதாரண குடிமகனுக்குள்ள சட்டமே எம்.பி. தொடர்பில் உள்ளது. குற்றவியல் சட்டத்தை மீறும் எம்.பி ஒருவரை பாராளுமன்றத்தைத் தவிர வேறு எங்கு வைத்தும் கைது செய்ய முடியும். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பாதிருக்கவும் சட்டத்தில் இடமுண்டு. அந்த எம்.பி.யை பாராளுமன்றத்திற்கு அழைக்க சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது.
மக்களின் கவனத்தை திருப்பவே ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் இந்த விடயத்தை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதை விடுத்து தேங்காய் உடைப்பதால் எதுவித பயனும் ஏற்படாது.
பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் உரையாற்றுவதற்கு பொதுமக்களின் பெருமளவு பணம் செலவாகிறது. ஒரு வசனத்தில் சாதிக்கக் கூடிய விடயத்தை ஏன் பெரிது படுத்துகிஅர்கள். மன்னிப்புக்கோரும்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பொன்சேகாவின் மனைவியை கேட்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக