சனி, 30 அக்டோபர், 2010

அழகிரி - ஸ்டாலின் வருகையால் டில்லி பரபரப்பு

சென்ற வாரம் மத்திய அமைச்சர் அழகிரியும், துணை முதல்வர் ஸ்டாலினும் ஒன்றாக டில்லி வந்திருந்தனர். இது டில்லியில் பத்திரிகை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் இருவரும் ஒன்று சேர்ந்து பிரதமரைச் சந்தித்தது மேலும் வியப்பை ஏற்படுத்தியது. அழகிரியின் மகன் திருமண அழைப்பை இருவரும் பிரதமரிடம் அளித்தனர். பிறகு சோனியா, அத்வானி உட்பட பல தலைவர்களை சந்தித்து பத்திரிகை அளித்தார் அழகிரி. அப்போது ஸ்டாலின் உடன் செல்லவில்லை.சில ஆங்கில தொலைக்காட்சிகள், ஸ்டாலின், அழகிரி இருவரும் ஒன்றாக செல்வது போல காட்சிகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்தனர்.  ஏமாற்றம்தான் மிஞ்சியது. பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனி கார்களில் வந்தனர். பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து யாரையும் சந்திக்காததால் மீடியாவிற்கு பெரும் ஏமாற்றம்.

பிரதமர் -  சோனியா  உறவில் விரிசல்? பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கும் இடையே உறவு சரியில்லை என்று டில்லி அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஒரு பேச்சு உண்டு. இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாக டில்லியில் பேசப்படுகிறது. அமைச்சரவை விவகாரங்கள் மற்றும் நாட்டுநடப்பு ஆகியவற்றை மட்டுமே பிரதமர் கவனித்துக் கொள்கிறார். மற்றவை எல்லாம் சோனியாதான் பார்த்துக் கொள்கிறார். ஒரு அமைச்சர் தன் மாநில காங்கிரஸ் கமிட்டி தொடர்பாக பிரதமரிடம் பேசினார். "கட்சி விவகாரம் தொடர்பாக என்னிடம் பேச வேண்டாம். மேடத்திடம் பேசுங்கள். உங்கள் இலாகா தொடர்பான பிரச்னையாக இருந்தால் சொல்லுங்கள்' என, கறாராக சொல்லிவிட்டார் பிரதமர்.   சென்றவாரம் உ.பி., முதல்வர் மாயாவதி, பிரதமரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பிரதமரை சந்திக்க அசாம் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகோய் நெடு நேரமாக காத்துக் கொண்டிருக்க, பிரதமரோ மாயாவதியிடம் பேசிக் கொண்டிருந்தார். உ.பி., மாநில திட்டங்களுக்கு பிரதமர் அனுமதி தர வேண்டும் என்று, மாயாவதி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், காங்கிரசிலோ எதற்கு பிரதமர் இவ்வளவு நேரம் அந்த அம்மணியுடன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர். சோனியாவும், ராகுலும், மாயாவதிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் என்பதால், முதல்வர்களை சந்தித்து பேச வேண்டும். அதற்காக, எதற்கு இவ்வளவு முக்கியத்துவம். ஒரு வேளை அரசியல் ஏதாவது பேசினார்களா என்று சந்தேகப்படுகின்றனர் காங்கிரசார்.

மராட்டி மானுஸ் : பா.ஜ.,  தலைவர் நிதின் கட்காரி, காமன்வெல்த் விளையாட்டு தொடர்பாக, பிரதமர் அலுவலகம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். இது தொடர்பாக  சில ஆவணங்களையும் வெளியிட்டு, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், இந்த ஆவணங்கள் ஏற்கனவே மீடியாவில் வெளியானவைதான்.இதற்கிடையே, காங்கிரசில் அரசல், புரசலாக பேசப்படும் விஷயம்  கட்காரி சுத்தமான மராட்டி ஆசாமி. சிவசேனாவைப் போல, தன் மாநிலத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர். மராட்டியர் என்றாலே ஒரு தனிப்பிரியம்.இன்னொரு பக்கம் காமன்வெல்த் ஊழல் விவகாரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர் சுரேஷ் கல்மாடி. இவரும் மராட்டியர். அட நம்ம ஊரா என்று இங்கே சொல்வது போல, இரு மாராட்டியர்கள் சந்தித்துக்கொண்டால், "அட நம்ம மராட்டி மானுஸ்' என்று சொல்வர். மராட்டிக்காரரான கட்காரிக்கு அவருடைய மாநிலத்துக்காரர் கல்மாடி மறைமுகமாக காமன்வெல்த் தொடர்பான விவகாரங்களை  போட்டுக் கொடுக்கிறாரோ என்று காங்கிரசார் சந்தேகப்படுகின்றனர்.

பராமரிக்க முடியாமல் திண்டாட்டம் : ஊழல் பிரச்னைகளுக்கு மத்தியில் எப்படியோ காமன்வெல்த் விளையாட்டை நன்றாக நடத்திக் காட்டிவிட்டது மத்திய அரசு. ஆனால், பிரச்னை இனிமேல்தான். காரணம், இதற்காகக் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கங்களை பராமரிப்பதுதான்.பத்துக்கும் மேற்பட்ட ஸ்டேடியங்கள் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்க ஒரு ஸ்டேடியத்திற்கு மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும். இந்த பணத்திற்கு எங்கே போவது என்று, டில்லி அரசும் மற்ற அமைப்புகளும் கவலையில் ஆழ்ந்துள்ளன. இதற்காக ஒரு திட்டமும் தயாராகிவிட்டது. இந்த விளையாட்டு அரங்கங்களை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துவிடுவது, அவர்கள் பராமரிப்பர், அரசுக்கு பணமும் கிடைக்கும்,  விளையாட்டு அரங்குகளும் நன்றாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தனியார் நிறுவனங்கள் இந்த அரங்குகளை விளையாட்டு அல்லது வேறு விவகாரங்களுக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். அதே சமயம் அரங்குகளுக்கு எந்தவித சேதமும் வரக்கூடாது. இது எப்படி இருக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக