ஞாயிறு, 10 அக்டோபர், 2010

Bihar Election: சாதியா அல்லது அபிவிருத்தியா?

பிஹார் சட்டசபைத் தேர்தலில் சாதியா அல்லது அபிவிருத்தியா?
இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஒக்ரோபர் 21ந் திகதியிலிருந்து நவம்பர் 20ஆம் திகதி வரை ஆறு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. தேர்தல் முடிவு நவம்பர் 24ந் திகதி வெளியிடப் படும்.
பதினைந்து வருடங்களாக தொடர்ச்சியாக ஆட்சி செய்த கட்சியான லல்லு பிரசாத் யாதவ்வின் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள்ளைத் தோற்கடித்து ஐக்கிய ஜனதா தள்- பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி 2005ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஐக்கிய ஜனதா தள்ளின் நிதிஷ் குமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
ஐக்கிய ஜனதா தள்- பாரதிய ஜனதா கட்சி அணி, ராஷ்டிரிய ஜனதா தள்- லோக் ஜனசக்தி கட்சி அணி, காங்கிரஸ், இடதுசாரிகள் என நான்கு முனைப் போட்டி இடம்பெறுகின்ற போதிலும் முதலிரு அணிகளுமே பிரதான போட்டியாளர்கள்.
பிஹார் மாநிலத்தில் சாதி அடிப் படையிலேயே வாக்களிப்பு இடம்பெறு வது முந்திய காலங்களில் வழமையாக இருந்தது. நிதிஷ் குமாரின் அரசாங்கம் கடந்த ஐந்து வருட காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை நிறை வேற்றியிருப்பதால் இத் தேர்தலில் மக்கள் சாதிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அபிவி ருத்திக்காகத் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று ஆளும் கூட்டணியினர் கூறுகின்றனர்.
பதினைந்து வருட காலம் இல்லாத அளவுக்குக் கடந்த ஐந்து வருடங்களில் பிஹாரில் அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதை ஒத்துக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி மத்திய அரசாங்கம் நிதி வழங்கியதாலேயே அபிவிருத்தி சாத்தியமாகியது என்று உரிமை கோருகின்றது. இதே நேரம், ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்வும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானும் தேர்தலின் போது மக்கள் சாதி அபிமானத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பிரதான இரண்டு அணிகளினதும் தலைவர்கள் பிஹாரில் கணிசமான தொகையினராக உள்ள மூன்று பெரிய சாதிகளைச் சேர்ந்தவர்கள். லல்லு பிரசாத் யாதவ் யாதவ் சாதியைச் சேர்ந்தவர். ராம் விலாஸ் பஸ்வான் தலித். நிதிஷ் குமார் குர்மி வகுப்பைச் சேர்ந்தவர்.
மக்கள் சாதி அடிப்படையில் பிரிந்து வாக்களிப்பார்க ளேயானால் உயர் சாதியினரும் முஸ்லிம்களும் தீர்மான சக்தியாக அமையலாம். கடந்த சட்டசபைத் தேர்தலில் உயர் சாதியினரில் பெரும் பான்மையானோர் ஐக்கிய ஜனதா தள்- பாரதிய ஜனதா கட்சி அணிக்கே வாக்களி த்தனர். மாநில அரசாங்கம் முன்மொழிந்த நிலச் சீர்திருத்த ஆலோசனை உயர் சாதியினரின் சொத்துடைமைக்கு அச்சுறுத்தலாக அமைவதைக் காட்டி உயர் சாதியினரை வென்றெடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியிருக்கின்றது.
ஆளும் கூட்டணிக்குள் உறவு சுமுகமாக இல்லை. பாரதிய ஜனதா கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தள்ளுக்குமிடையே நீறுபூத்த நெருப்பாகப் பகைமை இருந்து வருகின்றது. கடந்த ஜூன் மாதத்தில் பிஹாரின் தலைநகர் பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது பாரதிய ஜனதா கடசிக்கும் நிதிஷ் குமாருக்குமிடையே முரண்பாடு வெடித்தது.
முதலமைச்சர் என்ற வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்தை நிதிஷ்குமார் திடீரென ரத்துச் செய்யும் அளவுக்கு அந்த முரண்பாடு ஆழமானதாக இருந்தது. இரண்டு கட்சிகளும் தேர்தலை மனதில் வைத்துச் சமரசம் செய்து கொண்ட போதிலும், உள்ளூரப் பகைமையுணர்வு இல்லாதிருக்காது.
பிஹார் தேர்தல் பிரசாரத்துக்கு நரேந்திர மோடியும் வருண் காந்தியும் வரக்கூடாது என்று நிதிஷ்குமார் விதித்த நிபந்தனையைப் பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொண்டிருக்கின்றது. நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர். இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
வருண் காந்தி பகிரங்கமாகவே முஸ்லிம்களைக் கேவலப்படுத்திப் பேசியவர். முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்பார்ப்பதாலேயே நிதிஷ் குமார் இவ்விருவரும் தேர்தல் பிரசாரத்துக்கு வரக்கூடாது என்கின்றார். நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிதிஷ்குமாரின் இந்த நிபந்தனை முஸ்லிம் வாக்காளர்களைப் பெருமளவில் திருப்திப்படுத்துமென எதிர்பார்க்க முடியாது.
பிஹாரில் ஆட்சியைக் கைப்பற்றும் எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியிடம் இல்லை. மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் கடந்த தேர்தலின் போது ஒன்பது ஆசனங்களை மாத்திரம் காங்கிரஸ் கட்சியினால் பெற முடிந்தது. இந்தத் தடவை ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் காங்கிரஸ் கட்சியின் இலக்கு. ராகுல் காந்தி இந்த இலக்கை ஈட்டித்தருவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகின்றார்கள்.
லல்லு பிரசாத் யாதவ் தனது மகனை தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றார். மகனை முதலமைச்சராக்குவது அவரின் திட்டம். நிதிஷ்குமாரா அல்லது லல்லுவின் மகனா முதலமைச்சர் என்பது நவம்பர் 24ம் திகதி தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக