சனி, 23 அக்டோபர், 2010

11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டமொன்று நவம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் வளத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் யாப்பா, 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவு கன்றுகளை நட்டிய நாடு பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரையில் இல்லை என்பதால் சிலவேளை இதுவொரு கின்னஸ் சாதனையாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, இந்தத் திட்டத்திற்கு மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் ஆதரவு வழங்கும் என்றும் கூறினார். மரங்களை இயன்றளவு நட்டி, மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பசுமையான நாடு’ என்ற குறிக்கோளை அடைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத் மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். சமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக