வெள்ளி, 8 அக்டோபர், 2010

பழநியில் குட்டியுடன் கிணற்றில் விழுந்த யானை: 10 மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்பு

பழநி அருகே, கிணற்றில் விழுந்த குட்டியானையை காப்பாற்ற முயன்ற தாய் யானையும் விழுந்தது. தத்தளித்த யானைகள், பத்து மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி பகுதிகளில், தற்போது வாழை, கொய்யா, கரும்பு சாகுபடி நடக்கிறது. வனப்பகுதியில் உள்ள யானைகள், அவ்வப்போது தோட்டத்திற்கு வந்து செல்வது வழக்கம். மூலக்கடை ராமசாமி தோட்டத்தில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, ஒன்பது யானைகள் கூட்டமாக வந்தன. பிற யானைகள் வனத்திற்குள் சென்றபின், ஒரு குட்டி ஆண் யானை, தாய் யானையுடன் விளையாடிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் யானைக்குட்டி, கிணற்றில் தவறி விழுந்தது. காப்பாற்ற முயன்ற தாய் யானையும், கிணற்றுக்குள் விழுந்தது. 30 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால், வெளியேற முடியாமல் தத்தளித்தன. யானைகளின் பிளிறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பிற கிணறுகளில் மின்பம்ப் அமைத்து, பைப்-லைன் மூலம் கிணற்றில் தண்ணீர் நிரப்பப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு, மண் அகற்றும் இயந்திரம் மூலம் கிணற்றின் பக்கவாட்டில் 10 அடி ஆழம் வரை சரிவான பாதை அமைத்து, யானைகளை மீட்க முயற்சி நடந்தது.

மேலும் 20 அடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில், காலை 7 மணிக்கு குட்டியானை மட்டும் கிணற்றில் இருந்து வெளியேறியது. தாய் யானை முட்டித்தள்ளி இதற்கு உதவியது. தரைப்பகுதிக்கு வந்து துள்ளிக்குதித்த குட்டியானை, வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இருப்பினும் அதே வழியில் தாய் யானையால் ஏற முடியவில்லை. பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர், யானையின் வால்பகுதியில் கயிற்றை கிணற்றில் வீசி கோர்த்து இழுத்தனர். மிகுந்த சிரமத்துடன் காலை 8.45 மணிக்கு மீண்ட தாய் யானை, தரைக்கு வந்ததும் சந்தோஷத்துடன் வனப்பகுதிக்குள் சென்றது.

மாவட்ட வன அலுவலர் தங்கராஜ் கூறுகையில், "வனப்பகுதியைச் சுற்றியுள்ள விளைநிலங்கள், கிணறுகளை விவசாயிகள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வனத்துறை சார்பில் ஒன்பது கி.மீ.,க்கு சூரிய மின்வேலியும், ஒரு கி.மீ.,க்கு அகழி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கான இடம் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை,'என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக