திங்கள், 20 செப்டம்பர், 2010

பையனூர் வீடு... வேணவே வேணாம்! - ஒதுங்கி ஓடும் திரைத் தொழிலாளர்கள்

பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் கட்டப்படவிருக்கும் வீடுகளை வாங்க யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

பழைய மாமல்லபுரம் சாலையில் பையனூர் என்ற இடத்தில் சினிமா தொழளிலாளர்களுக்கு வீடுகள் மற்றும் ஸ்டுடியோக்கள் அமைக்க 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது. இதனை அறிவிக்க ஒரு விழாவும், வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட தனி விழாவும் முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரமாண்ட விழாக்கள் நடந்தன.

ஆரம்பத்தில் இந்த இந்த இடத்தை முழுக்க முழுக்க இலவசமாகவே தருவதாகவும் வீடுகளையும் இலவசமாகவே கட்டித் தருவதாகவும் அறிவித்தது தமிழக அரசு. இந்த அறிவிப்பு திரைப்படத் தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்தாலும், பலவிதமான விமர்சனங்களைக் கிளப்பியது.

சில தினங்களுக்குப் பிறகு, 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நிலத்தை மட்டும் தருவதாகவும், வீடுகளை தொழிலாளர்களே கட்டிக் கொள்ள வேண்டும் அறிவித்தது.

இது தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தாலும், அரசு கொடுத்த இலவச நிலத்தை வாங்கிக் கொண்டனர் திரைப்பட சங்க நிர்வாகிகள். இந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்காக ஒரு கூட்டுறவு சங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது (யாருக்கும் நிலம் தனியாக தரப்பட மாட்டாது. கட்டிய வீடாகத்தான் தரப்படும்!).

இந்த சங்கத்தில் சந்தா செலுத்தி உறுப்பினராகி வரும் தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள், அங்கு கட்டப்படும் வீடுகளின் விலைகளைக் கேட்டதும் தெறித்து ஓடுகிறார்கள்.

முதல் கட்டமாக இங்கு 15000 வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7500 வீடுகள் தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளாக அமைகின்றன.

இதில் 350 சதுர அடி வீட்டின் விலை 3,10,000 ரூபாய் என்றும் இதற்குக் கட்ட வேண்டிய முன் பணம் 46,500 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வீடுகள்தான் இருப்பதிலேயே குறைந்த விலை வீடுகள். ஆனால் நாளொன்றுக்கு ரூ 350 மட்டுமே சம்பளமாகப் பெறும் அடிமட்டத் தொழிலாளர்கள் இந்தத் தொகையை தங்களால் செலுத்த முடியாது என்று கூறியுள்ளனர்.

இதற்கு அடுத்த கட்டமாக, 450 சதுர அடி வீட்டின் விலை ரூ 5,00,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கட்ட வேண்டிய முன் பணம் 75,000 ஆகும்.

600 சதுர அடி வீட்டின் விலை 9,00,000 (முன்பணம் ரூ 1,35,000) என்றும், 800 சதுர அடி வீட்டின் விலை 12,00,000 (முன் பணம் 1,80,000) என்றும், 1000 சதுர அடி வீட்டின் விலை 15 லட்சம் ரூபாய் (முன் பணம் 2,25,000) ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பையனூர். இவ்வளவு தொலைவில் அமையும் வீடுகளுக்கு இந்த விலை கொடுக்க தயாராக இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சினிமா தொழிலின் முக்கிய கேந்திரம் கோடம்பாக்கம், வடபழனி மற்றும் சாலிகிராமம் பகுதிகள்தான். பையனூரில் வீடு கட்டிக் கொண்டாலும், தொழிலுக்கு கோடம்பாக்கத்துக்குதான் வந்தாக வேண்டும்.

இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டிய நேரம், போக்குவரத்து இடையூறுகள், பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வீடுகளை வாங்க பெரும்பாலான தொழிலாளர்கள் தயங்குகின்றனர். இவர்களில் பலர் 'எங்களுக்கு வீடுகளே வேண்டாம்... ஆளை விடுங்க' என்று சங்க நிர்வாகிகளிடம் வெளிப்படையாகவே சலித்துக் கொண்டதும் நடந்திருக்கிறது.

இந்த சூழலில், சில சங்கங்கள் மட்டும் நட்சத்திர கலைவிழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் வசூலாகும் தொகையை தங்கள் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு நட்சத்திரங்கள் எந்த அளவு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதற்கிடையில், ஆட்சி மாற்றம் நடந்து விடுமோ என்ற அச்சம் கோடம்பாக்கத்தை ஆட்டிப்படைக்கத் துவங்கியிருப்பதால், முடிந்தவரை இப்போதே இடத்தை தங்கள் வசமாக்கிக் கொள்வதில் குறியாக உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக