மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை, இந்த முறை கடல் நீரை பெட்ரோலாக்கி காட்டப் போவதாக சவால் விட்டுள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று சென்னையில் 1 லட்சம் லிட்டர் கடல் நீரை எரிபொருளாக்கிக் காட்டப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மூலிகை பெட்ரோல் தயாரித்திருப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதை பல்வேறு ஆய்வாளர்கள் பரிசோதித்தனர், விஞ்ஞானிகளும் பரிசோதித்தனர். இறுதியில் இது பெட்ரோல் இல்லை என்று கூறி விட்டனர். இதன் காரணமாக பிள்ளையின் மூலிகை 'பெட்ரோலுக்கு' காப்புரிமை கிடைக்கவில்லை.
அதன் பின்னர் தனது பார்முலாவை பறிக்க முயற்சி, ஆள் கடத்தல் என பல சர்ச்சைகளில் சிக்கினார் ராமர் பிள்ளை. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராமர் பிள்ளை.
அப்போது அவர் கூறுகையில், நான் கண்டுபிடித்த மூலிகை எரிபொருள் உண்மை என்று ஐரோப்பா யூனியனை சேர்ந்த டென்மார்க் அறிவியல் தொழில்நுட்ப பரிசோதனை கூடத்தில் சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் உற்பத்தி செய்யும் எரிபொருள் பெட்ரோலுக்கு பதிலாக விளங்குகிறது என அங்கீகாரம் வழங்கி உள்ளது.
மேலும் உலக காப்புரிமை அமைப்பு எனது கண்டுபிடிப்பை புதுமையானது என்றும், காப்புரிமை பெற தகுதியானது என்றும் கூறி உள்ளது. எனது எரிபொருள் உற்பத்திக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளேன். விரைவில் காப்புரிமை கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நான் பெற்ற இந்த வெற்றியை முதல்வர் கருணாநிதியின் பாதத்தில் சமர்ப்பித்து உலக நாடுகளின் எரிபொருள் பற்றாக்குறையை சரிசெய்வேன்.
ஒரு லிட்டர் எரிபொருள் உற்பத்தி செய்ய 5 ரூபாய் மட்டுமே செலவாகிறது. நான் தற்போது அமோனியம் குளோரைடு மற்றும் பிரக்டோஸ், சிட்ரிக் அமிலம் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து எரிபொருள் தயாரிக்கிறேன். இது ஒரு முறை. இதுபோல 10 முறைகள் உள்ளன. சிட்ரிக் அமிலத்திற்கு எலுமிச்சம் பழச்சாற்றை பயன்படுத்துகிறேன்.
அக்டோபர் 2-ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஒரு லட்சம் லிட்டர் கடல்நீரை எடுத்து பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக மாற்றிக்காட்டுவேன்.
சிலர் மிரட்டி என்னுடைய காப்புரிமையை கைப்பற்ற தீய எண்ணத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் யார் என்று எழுத்து மூலம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்கொடுக்க உள்ளேன் என்றார் ராமர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக