வியாழன், 23 செப்டம்பர், 2010

அரசுடன் மோதல் போக்கு இனி இல்லை: சம்பந்தன்

இலங்கை அரசோடு தற்போதைக்கு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரசை எவ்வாறாவது ஒரு வழிக்கு கொண்டுவந்து தமிழர் நலன் குறித்த விடயங்களை நிறைவேற்றவே தாங்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.
இலங்கை அரசு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் குறித்து அரசுடன் இணைந்து இயங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியிருப்பதாகவும் , இது குறித்து அரசுடன் சேர்ந்து பணியாற்ற தமது அமைப்பிலிருந்து சிலரின் பெயர்களை கூட்டமைப்பு அரசிடம் அளித்திருப்பதாகவும் , ஊடகச் செய்திகள் கூறின.
இந்தப் பிரச்சினை குறித்து தமிழோசை இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, இது ஒன்றும் புதிய விடயம் அல்ல என்றும், யுத்தம் காரணமாக வடகிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யவும், மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்றவற்றுக்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கத்தயாராக இருப்பதாக, கூட்டமைப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து அரசு நியமிக்க உள்ள குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இடம்பெறும் உறுப்பினர்கள் பெயரைத் தருமாறு, சமீபத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டிருந்தார். இதனடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரது பெயர்கள் அரசுக்கு தரப்பட்டிருகின்றன என்று சம்பந்தன் தெரிவித்தார்.
ஆனால் அரசியல் தீர்வு தொடர்பாக, தமிழ் தேசியக்கூட்டமைப்பினர், அரசுடன் பேசியிருந்தாலும், இது தொடர்பில் இன்னும் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது என்றார் சம்பந்தன்.
போர் முடிந்து சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ஆகியிருந்த நிலையில், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் நடவடிக்கைகளை எடுக்க, அரசாங்கத்தின் சார்பில் அவசரத்தன்மை காட்டப்படவில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் போதிய அழுத்தம் தரவில்லை என்ற கருத்துக்களை முற்றிலுமாக மறுக்க முடியாது என்று கூறிய சம்பந்தன், இந்த காலகட்டத்தில் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவை நடந்திருக்கின்றன, அரசு, அவர்களுக்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது என்றார்.
ஆனால் இந்தத் தருணத்தில் அரசுடன் மோதல் போக்கை கையாளாமல், அரசை ஒரு வழிக்குக் கொண்டுவந்து, தமிழர்களுக்குத் தேவையான காரியங்களை ஆற்ற முயன்று செய்து கொண்டிருக்கின்றோம் என்றார். ராஜதந்திர ரீதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பேசவேண்டியவர்களுடன் பேசியிருக்கின்றது. குறிப்பாக இந்தியாவுடன் பேசியிருக்கின்றது, இது தொடர்பாக இந்தியா தனது கருத்தை அரசுக்கும் , தமக்கும், ஏனையவர்களுக்கும் அறிவித்திருக்கின்றது, இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சமீபத்தில் இலங்கை சென்று அரசுடன் விவாதித்திருக்கின்றார், இந்திய வெளியுறவு அமைச்சரும் விரைவில் இலங்கை செல்ல உள்ளார் என்றார் சம்பந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக