வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சினேகா நேற்று நீதிபதிமுன் கண்ணீர் மல்க சாட்சி அளித்தார்.

சென்னை: ‘திருமணம் செய்யாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று பெங்களூர் வாலிபர் விடுத்த கொலை மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த சினேகா நேற்று நீதிபதிமுன் கண்ணீர் மல்க சாட்சி அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இவருக்கு கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவர் செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பி, ‘என்னை திருமணம் செய்யாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று மிரட்டினார். அதிர்ச்சி அடைந்த சினேகா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்தார். ராகவேந்திராவை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சாட்சி சொல்ல பகல் 2 மணிக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கோர்ட் வளாகத்தில் காத்திருந்தார் சினேகா. 3.30 மணிக்கு விசாரணை தொடங்கியது.

நீதிபதி ஸ்ரீராம் விசாரித்தார். அவர் முன்பு ஆஜரான சினேகாவின் தந்தை ராஜாராம், ‘இந்த வழக்கில் என் மகள் சினேகா சாட்சி சொல்ல அனுமதிக்க வேண்டும்’ என்றார். அனுமதி வழங்கப்பட்டது. பிறகு கண்கலங்கியபடி சினேகா சாட்சி அளித்தார். ‘2008ம் ஆண்டில் எனது தந்தையை சந்தித்த ராகவேந்திரா ‘ஆட்டோகிராப் பார்ட் 2’ எடுக்கப் போவதாக கூறினார். அவரை தந்தை திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து எனது செல்போனுக்கு 50 மிஸ்டுகால், 20 எஸ்.எம்.எஸ் அனுப்பி டார்ச்சர் செய்தார் ராகவேந்திரா.

அவரை யார் என்றே எனக்கு தெரியாது. என் செல்போன் எண்ணை மாற்றினேன். அதையும் தெரிந்துகொண்டு மீண்டும் எஸ்.எம்.எஸ். அனுப்பினார். ‘உன்னை திருமணம் செய்வேன்.. இல்லாவிட்டால் முத்தமாவது கொடுப்பேன். என்னுடன் செல்போனில் பேசாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பிரச்னையால் எனது குடும்பமே இன்று கோர்ட்டில் நிற்கிறது’ என்றபடி கதறினார். அதைக்கண்டு அவரது அம்மா பத்மாவதி, தந்தை ராஜாராம், அக்கா சங்கீதா ஆகியோரும் கதறி அழுதனர்.

வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் மாதத்துக்கு நீதிபதி ஸ்ரீராம் தள்ளிவைத்தார். இதற்கிடையே, நீதிபதி முன்பு சினேகா கதறி அழுத தகவல் நீதிமன்றம் முழுக்க பரவியது. வக்கீல்களும் பொதுமக்களும் சினேகா இருக்கும் இடம் தேடி திரண்டனர். ‘எந்த தவறும் செய்யாத நிலையில், யாரோ ஒருவர் கொடுக்கும் டார்ச்சரால் கேஸ், கோர்ட் என அலைக்கழிக்கப்படுவது பொறுக்க முடியாமல்தான் அனைவரும் கண்கலங்கி விட்டனர்’ என்று சினேகா தரப்பில் கூறினர். இதனால் நேற்று நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக