சனி, 11 செப்டம்பர், 2010

முரளியின் திடீர் மரணம் திரைத்துறையினர் , பத்திரிகையாளர்கள், உறவினர

தயத்தின் வலியை தமிழ்த் திரை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் முரளி 1991ம் ஆண்டு வெளியான இதயம் திரைப்படத்தின் மூலம் காதலால் துடிக்கும் இதயத்தின் வலியை தன் நடிப்பால் நமக்குள் ஏற்படுத்திய முரளி... இம்முறை தானே அந்த வலிக்கு உட்பட்டு பழகியவர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும்  இதய வலியை உணர்த்தியிருக்கிறார்.  இது நிஜம் என்பதால் இந்த முறை அந்த வலியின் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கிறது.முரளியின் இந்தத் திடீர் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்து, சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.  46 வயதில் முரளியின் இதயம் துடிக்க மறுத்திருக்கிறது1984ம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகிமாகி  26 ஆண்டுகாலம் சினிமா வாழ்க்கையில் ஒப்பற்ற கலைஞனாக திகழ்ந்தவர் முரளி.>தமிழ்த்திரையுலகில் என்றும் மார்க்கண்டேயன், என்றென்றும் கல்லூரி மாணவர், அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் ஒப்பற்ற நடிகர் என்று அனைவராலும் போற்றப்படுபவர் முரளி. இவர் பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன். தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். இவரது மனைவி ஷோபனா. மகள் காவ்யா, மகன்கள் அதர்வா, ஆகாஷ்.பெங்களூருவில் பிறந்த இவர், தமிழில் நடிக்க வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமைக்குறியவர் முரளி.>ஒரு நடிகன் என்றால் நல்ல நிறம்,அழகு, உயரம், அப்படி இப்படி என்று கூறப்படும் எந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட அடையாளங்களும் இல்லாதவர். கறுப்பு, சாதாரண உயரம், மிகமிக எளிமையான தோற்றம் இதுதான் முரளி. ஆனால் அதுதான் அவரின் சிறப்பு. ‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்ற பாடலே அவருக்காகதான் உருவாக்கப்பட்டது. இயக்குனர் மணிரத்தினம் பகல் நிலவு படத்திற்கு நாயகன் தேடிய போது. முரளிதான் இந்தப் படத்திற்கு ஏற்ற நடிகன் என்று கூறி நடிக்கவைத்தார்.அந்தப் படத்திற்கு மட்டுமல்ல, காதல்(இதயம்), பாசம்(பொற்காலம்), நகைச்சுவை(சுந்தரா டிராவல்ஸ்), ஆக்‌ஷன்(அதர்மம்), என்று அனைத்துவிதமான கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற சிறந்த நடிகர் முரளி.
2001ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது கடல்பூக்கள் படத்தில் முரளியின் சிறந்த நடிப்புக்கு கிடைத்தது. கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

சிவாஜி கணேசன்(என் ஆச ராசாவே), விஜயகாந்த்(என்னாசை மச்சான்), பிரபு(நினைவுச் சின்னம்,பாசக்கிளிகள்), சத்யராஜ்(பகல் நிலவு), பிரபுதேவா(அள்ளித்தந்த வானம்), சூர்யா(கதலே நிம்மதி), பார்த்திபன்(வெற்றிக் கொடிகட்டு), சரத்குமார் (சமுத்திரம்), மம்முட்டி(ஆனந்தம்) உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்களில் நடித்து வந்தார் முரளி. இதயம் படத்தின் இவரது ‘ராஜா’ கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இன்றும் அவரது மகன் அதர்வா நாயகனாக அறிமுகமாகியுள்ள ‘பாணா காத்தாடி’ படத்திலும் ‘இதயம் ராஜா எம்.பி.எஸ் நான்காம் ஆண்டு மாணவர்’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

இப்படி ஒரு முன்னணி கதாநாயகனாய் இருந்தாலும் முரளி இதுவரை யாரிடமும் மரியாதைக் குறைவாக நடந்ததில்லை. படப்பிடிப்பில் டீ கொடுப்பவராக இருந்தாலும் சரி, படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அனைவரிடமும் ஒரே மாதிரியான பரிவுடன் பழகக்கூடியவர்.

அதுமட்டுமல்ல... கடந்த 2006ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலின் போது விஜயக்குமார், சிம்ரன், சினேகன் ஆகியோருடன் இணைந்து முரளியும் அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது, சினேகன்கூட எதிர்கட்சிகளை கடுமையாக சாடிப் பேசினார். ஆனால், அந்த அரசியல் பிரச்சாரக் காலகட்டத்திலும்கூட அரசியல் நாகரீகத்துடன் பேசிய ஒருவர் முரளி மட்டுமே. இவர் சிறப்பான நடிகர் மட்டுமல்ல பொறுப்பான தந்தையும் கூட. < தனது மகன் அதர்வாவை ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி ஒரு நடிகனாக்கிவிட்டார். அந்தவகையில் முரளியின் குடும்பம் மூன்றுத் தலைமுறை திரைக்குடுப்பம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இவரது மூத்த மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். தனது மகளின் திருமணத்தை வரும் மே மாதம் பிரமாண்ட விழாவாக நடத்தத் திட்டமிட்டிருந்தார் முரளி.>பாணா காத்தாடி படம் வெளிவத்திருந்த வாரத்தில் அதர்வாவுடன் நக்கீரன் அலுவலகம் வந்திருந்தார் முரளி.அதார்வாவை நக்கீரன் ஆசிரியரிடம் அறிமுகப்படுத்தி பேசிய முரளி, “ஒரு தந்தை என்ற முறையில் அதர்வாவை நடிகனாக்கி எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன். இனிமேல் இவனோட வளர்ச்சி எல்லாம் உங்களிடம் தான் (பத்திரிகைதுறை) இருக்கு. இனி இவன் உங்கவீட்டு பிள்ளைங்க அண்ணா. இந்தப் படத்தில் அதர்வாவின் நடிப்புக்கு நிறையப் பாராட்டுக்கள் வருகிறது. கௌதம் மேனனின் அடுத்தப் படத்தில் அதர்வா நடிக்க வாய்ப்பிருக்கிறது. (முரளி அடுத்து நடிப்பதாக இருந்த அவரது நூறாவது படத்திற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.எனது பகல் கனவு, இதயம் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே எனது பையனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கு எனது முதல் நன்றியை சொல்லியாகனும்” என்றார்.  அதர்வாவை நக்கீரன் ஆசிரியரிடம் எப்படி அறிமுகப்படுத்தினாரோ அதே போல் பைண்டிங் பிரிவினரிடமும் இவனை உங்கள்வீட்டு பிள்ளையாக பார்த்துக்கோங்க என்றார். சுமார் 2 மணி நேரம் அலுவலகத்தில் இருந்த அவர் அனைவரோடும் போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.
மனைவி ஷோபனா பற்றி சொல்லிய போது, “இவர் மனைவி மட்டுமல்ல, இன்னொரு தாய். இதுவரை எனது வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் அனைத்திலும் என்னுடன் உற்றத்துணையாக இருப்பவர். நான் நேசிக்கும் அன்பான ஜீவன்” என்றார்.(முரளி-ஷோபனா காதல் திருமணம் செய்தவர்கள்.)

இப்படி ஒரு அன்பான குடும்பம், இன்று முரளியின் பிரிவால் கண்ணீரில் மூழ்கி இருப்பது காண்பவர் அனைவரின் நெஞ்சத்தையும் உறையச் செய்கிறது.

‘தனது முதல் படமே தந்தைக்கு இறுதிப் படமாகிவிட்டதே’என்ற வேதனையின் உச்சத்தில் அழுவதற்கும் முடியாமல் விக்கித்துபோயுள்ளார் அதர்வா.

உறவினர்கள், திரையுலகத்தினர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மட்டுமின்றி யார் ஒருவர் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஒப்பற்ற பண்பாளர் முரளி. இத்தகைய ஒரு நல்ல மனிதரின் இறப்பு அனைவருக்கும் பேரிழப்பு. இதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

இதயம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகி “தண்ணீர் பாட்டிலில் கண்ணீர் துளி ஒன்றை மட்டும் இட்டு” முரளியிடம் தருவார்.

அதே போல் நமது கண்ணீர் கங்கையை அவரது அஞ்சலிக்கு அர்ப்பணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக