ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

மனைவியை ஒதுக்குவதா ஆண்மை? - பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூரலிகான்

மனைவியை ஒதுக்குவது ஆண்மையாகாது. பிரபு தேவா, பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலமானவர்கள் இந்த விஷயத்தில் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாய் இருக்கக் கூடாது என்று மன்சூரலிகான் கூறினார்.

சென்னையில் நடந்த ஆண்மை தவறேல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "மனைவிகளை ஒதுக்குவது இப்போதெல்லாம் பேஷனாகிவிட்டது. சசி தரூர் இரண்டாம் திருமணம் செய்தார். அவரிடம் இருந்து தொடங்கி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா வரை வந்து நிற்கிறது.

கணவர்கள், மனைவிகளை நேசிக்க வேண்டும். பிரபலமானவர்களின் நடவடிக்கைகள் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்துவது போல் ஆகி விடக்கூடாது. மனைவியை ஒதுக்கிவிட்டு இன்னொரு பெண்ணை சேர்த்துக் கொள்வதா ஆண்மை?

இன்றைய சமூகத்தில் இளம் தலைமுறையினர் பலர் மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். ஊட்டியில் படப்பிடிப்புக்கு சென்றபோது காலை 7 மணிக்கு மதுக்கடையில் குவிந்து நின்ற இளைஞர்களை பார்த்து கலங்கினேன்.

நான் நடிக்கும் 'ரதம்' படத்தில் இதனை காட்சியாக்கியுள்ளோம். நான் அப்படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடிக்கிறேன். குடிகாரனாக இருந்து திருந்துவதுபோல் என் கேரக்டர் இருக்கும். நல்லவனாக மாறிய பிறகு சாராயம் குடிப்போரை பார்த்து தந்தையர்களே தயவு செய்து குடிக்காதீர்கள் குடிகுடியை கெடுக்கும். குடித்தவன் குடலை கெடுக்கும்.

கிட்னியை கொல்லும், கல்லீரலை சல்லடையாக்கும். வாய் நாறி, கண் சிவந்து மூச்சு விட முப்பது அடி நாறும். குழந்தைகள் தூரப்போகும். நீ கட்டிய மனைவி கரண்டியை வீசி சண்டை போடுவாள். உன் குழந்தைகள் கடைக் கோடியில் பிச்சை எடுக்கும். ஆகவே குடிக்காதீர்கள் என்று வசனம் பேசுவேன். இப்படத்தைப் பார்ப்பவர்கள் பாதிப்பேர் குடிப்பதை நிறுத்தி திருந்துவார்கள்..." என்றார்.

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், "கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யாமல் வாழ்வதே ஆண்மை. யாராக இருந்தாலும் அந்த ஆண்மை தவறாமல் வாழ வேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக