ஞாயிறு, 5 செப்டம்பர், 2010
முன்னாள் ஜனாதிபதிகள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும்
அமைச்சரவை நேற்று அங்கீகரித்த 18வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனைகளின்படி ஓய்வுபெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டி.எம். ஜயரத்ன புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனைகளை சமர்பித்தார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் திருத்த யோசனைகள் குறித்து அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தினார். 1977ம் ஆண்டு அரசியலமைப்பின்படி ஜனாதிபதி ஒருவர் தாம் விரும்பிய நேரத்தில் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொள்ள முடியும். புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாக நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு சமூகமளிக்க வேண்டும். அத்துடன் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜனாதிபதியாக ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட முடியும். 77ம் ஆண்டு அரசியலமைப்பில் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற ஷரத்து அந்த அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அதேவேளை புதிய அரசியலமைப்புத் திருத்தங்களில் 17வது அரசியலமைப்புத் திருத்ததின் படி உருவாக்கப்பட வேண்டிய சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் அதிகாரம் திருத்தப்படவுள்ளது. அரசியலமைப்பு சபைக்கு 5 உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். புதிய அரசியலமைப்புத் திருத்தின் படி அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதியே மேற்கொள்வார். நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதியே நியமிப்பார். அமைச்சுக்களின் செயலாளர், திணைக்களங்கள், நிறுவனங்களில் தலைவர்கள், ஆணையாளர்கள் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. திருத்த யோசனைகள் அடுத்த சில தினங்களில் உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தின் கருத்து கேட்டறியப்படும். இதன் பின்னர் எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, 9ம் திகதி வாக்கொடுப்பு நடத்தப்படும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக