திங்கள், 27 செப்டம்பர், 2010

இலங்கையில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் நிம்மதியாக வாழ முடியாத சூழல்

இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக அச்சமின்றி வாழ முடியும் என்றால் அவர்கள் ஏன் இன்றும் நாட்டை விட்டு ஓட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கு கூட நிம்மதியாக வாழ முடியாத ஒரு அச்சுறுத்தலான சூழலே   இன்று இலங்கையில் காணப்படுகின்றது என்று ஜே. வி. பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.    உள்நாட்டில் இல்லாதவற்றை ஐக்கிய நாடுகள் சபையில் உண்டு என அரசாங்கம் வழமைபோன்று கூறியுள்ளது.     இதனை நம்புவதற்கு ஐ.நா.வோ ஏனைய சர்வதேச நாடுகளோ முட்டாள்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தெளிவுபடுத்திய சோமவன்ச அமரசிங்க கூறுகையில்,
உள்நாட்டில் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை உலகம் அறிந்த உண்மையாகும். அதேபோன்று பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் பாரிய மோசடிகளே இடம்பெறுகின்றது. பொதுமக்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் அடக்கு முறைகள் காணப்படுகின்றது. மனித உரிமைகளுக்கோ மனிதாபிமானத்திற்கோ இலங்கையில் மதிப்பில்லை.
அரசியல் பழிவாங்கல்களும் சர்வாதிகார ஆட்சியுமே இலங்கையில் மேலோங்கியுள்ளது. இது உலக நாடுகள் அறிந்த உண்மை. இதனை இல்லை என அரசாங்கம் ஐ.நாவில் கூறியமை சர்வதேச மட்டத்திலான வேடிக்கையாகவே உள்ளது. சிறுபான்மை இன மக்கள் மாத்திரமல்ல எந்தவொரு இனத்திற்கும் இலங்கையில் அச்சமின்றி வாழ முடியாது.
காலாகாலமாக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பி. சலுகை இல்லாமல் போனதற்கு உள்நாட்டில் மனித உரிமைகளும் நல்லாட்சியும் இல்லாமையே காரணமாகும்.
அத்தோடு யுத்தம் முடிந்துள்ள போதிலும் வடக்கு கிழக்கில் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன. கம்பி வேலிகளுக்குள் தமிழ் மக்கள் சிறைப்படுகின்றனர். இன்னும் ஆள்கடத்தல்கள் கூட முடிவிற்கு வரவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு இலங்கையே சுதந்திரமான நாடு என்பதில் எவ்விதமான உண்மையும் இல்லை எனக் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக