திங்கள், 27 செப்டம்பர், 2010

வெடிகுண்டுகள் எந்த நேரமும் வெடிக்கலாம்: இலங்கை அரசுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

கொழும்பு,செப்.26: கரடியனாறு காவல் நிலையத்தில் வெடிமருந்துகள் வெடித்து 27 பேரைப் பலி வாங்கியதைப் போன்ற சம்பவங்கள் மேலும் நடக்கலாம், அதற்குள் அரசு விழிப்படைந்து போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளை அகற்றியே தீர வேண்டும் என்று வெடிமருந்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 2 லட்சம் கிலோ கிராம் அளவுக்கு சக்திவாய்ந்த வெடிமருந்துகளும் வெடித்திரிகளும் வைக்கப்பட்டுள்ளன. இவை விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்டவை அல்ல.

தமிழர் பகுதிகளில் சாலை அமைக்கவும் இதர அடித்தள கட்டுமானப் பணிகளுக்காகவும் சீனத்திலிருந்து தருவிக்கப்பட்டவையாகும். சாலை அமைக்கும் பணிக்காக சீனாவிலிருந்து சிறைக் கைதிகளை ஆயிரக்கணக்கில் அழைத்துவந்து தமிழர்களின் பகுதிகளில் தங்க வைத்திருக்கிறது அரசு என்ற செய்திகள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன.

அவர்களுடன் கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகளை வெளியில் வைத்தால் அது யாருடைய கையிலாவது சிக்கினால் ஆபத்து என்று போலீஸ் நிலையங்களில், வளாகங்களில், போலீஸ் நிலையங்களுக்கு அருகில் என்று வெடிமருந்துகளையும் வெடித்திரிகளையும் பெட்டி பெட்டியாக வைத்திருக்கின்றனர். சில இடங்களில் சரக்குப் பெட்டகங்களுடன் வைக்கப்பட்டுள்ளன.

வெடிமருந்துகளையும் வெடித்திரிகளையும் உரிய பாதுகாப்புடன் நல்ல பக்குவத்தில் வைத்திருக்க வேண்டும். அந்தப் பகுதியில் தீ விபத்து நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உரிய காலத்தில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் பயன்படுத்திவிட வேண்டும் அல்லது அப்புறப்படுத்திவிட வேண்டும். (போலீஸ்காரர்களுக்கு வெடிமருந்துகளைக் கையாள்வதில் பயிற்சியும் அனுபவமும் கிடையாது.)

இவை எதையும் செய்யாமல், திருடு போகாமல் இருந்தால் சரி என்று போலீஸ் நிலையங்களுக்கு அருகில் வைத்திருக்கின்றனர். தார்ச்சாலை போடுவது என்று தீர்மானித்தவுடன் ஜல்லியைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு மாதக்கணக்காக திரும்பிப் பார்க்காத அதிகார வர்க்கத்தின் மெத்தனம் இலங்கையிலும் காணப்படுகிறது. எனவே சாலை போடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த வெடிமருந்துகளும் இதர சாதனங்களும் அதன் பிறகு ஏறெடுத்தும் பார்க்கப்படாமல் இருக்கின்றன.

இவை வெடித்தால் போலீஸ் நிலையத்தில் இருப்பவர்களுக்கும் அருகில் வசிப்பவர்களுக்கும் உயிரிழப்பை ஏற்படுத்திவிடும் என்பதை கரடியனாறு சம்பவமே உணர்த்துகிறது.

அங்கே வைத்திருந்தது மிகக்குறைந்த அளவுதான். அதுவே இந்த அளவுக்கு உயிர்ப்பலி வாங்கியது என்றால் அதைப்போல பல மடங்கு வைத்திருக்கும் போலீஸ் நிலையங்களும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களும் தப்புமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி, கல்குடா மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உஹானா, தமானா, இங்கினியாகலா, அக்கரைப்பட்டு, பொட்டுவில், அம்பாறை ஆகிய ஊர்களில் போலீஸ் நிலையங்களுக்கு அருகில் இப்படி வெடிமருந்துகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக