செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஆரையம்பதி வீடமைப்புக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு!

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்காக ஈரான் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீடமைப்புத் திட்டமொன்றுக்கு அப்பிரதேசத்திலுள்ள பெரும்பாலான தமிழர்கள் தமது எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்

தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்காக ஈரானின் உதவியுடன் 70 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே தமது பிரதேசத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் காரணமாக தமிழ் கிராமங்களுக்கிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஆரையம்பதி பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் செயலாளரான சோ.மகேந்திரலிங்கம், இந்த வீடமைப்புத் திட்டம் அமைவதாலும் இந்த நிலை தமக்கு ஏற்படும் என்று கூறுகின்றார்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக வீடுகள் அமைக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லை என்றும் அவர்களது சொந்தக் காணிகளில் அவை அமைக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றும் தெரிவித்த அவர், இந்த வீடமைப்புத் திட்டத்துக்காக தமிழர்களின் காணிகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார்.
தமிழர்களின் காணிகளில் இந்த வீடுகள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொந்தமான மற்றும் பள்ளிவாசலுக்குரிய காணிகளிலேயே இந்த வீடுகள் அமைக்கப்படுவதாகவும் கூறுகின்றார்.
இது தொடர்பாக அந்தப் பிரதேசத்திலுள்ள தமிழர்கள் மத்தியில் நிலவிய சந்தேகம் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட்டிய கூட்டமொன்றில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமிழர்களுக்கும் ஒரு தொகை வீடுகளை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் வீடமைப்பு திட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒரு சாரார் இதனை நிறுத்தக் கோருவது கவலைக்குரியது. அப்படி நிறுத்தும் பட்சத்தில் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இன்னமும் இன நல்லுறவு ஏற்படவில்லை என்ற தோற்றம் வெளிப்படும். இதற்கு இடமளிக்காத வகையில் நிர்வாக ரீதியில் தீர்வு காணுமாறு அதிகாரிகளை பணித்துள்ளேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக