புதன், 15 செப்டம்பர், 2010

சிங்களவர்களின் நல்ல குணங்களும் தமிழ் இளைஞர்களின் கழிசறை சேட்டைகளும்

பத்திரிகைகளில் நேற்றைய தினம் இரண்டு செய்திகள் வெளியாகியிருந்தன. ஒன்று பிரபாகரனின் தாயாரைச் சந்தித்த சிங்களவர்கள் சிலர் அவரின் காலைத் தொட்டுக்கும்பிட்டார்கள் மற்றையது வேலணை சாட்டிக் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை கடல்நீருக்குள் மூழ்கிச்சென்று சேட்டைகள் செய்த தமிழ் இளைஞர்கள் பற்றியது. இரண்டு செய்திகளையும் கீழே வெளியிட்டிருக்கிறோம்.
 பார்வதி அம்மாளைப் பார்த்து காலில் விழுந்து வணங்கும் சிங்களர்கள்! சில தினங்களுக்கு முன்பு கூட, வட இலங்கைக்குக்கு சுற்றுலா வந்த 100 சிங்களவர்கள், வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பிரபாகரனின் தாயாரைப் பார்க்க விரும்புவதாகக் கூறிய அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளித்தது. அந்த சிங்களவர்களில் பலர் பார்வதியம்மாளைப் பார்த்ததும், காலில் விழுந்து வணங்கியதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன், உடல் நிலை சீர்குலைந்து, நினைவு தப்பிய நிலையில் மலேசியாவிலிருந்து சென்னை வந்த பார்வதி அம்மாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அவரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பினர் போலீசார்.
இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை அளிக்க நிபந்தனையுடன் முன்வந்தன தமிழக – இந்திய அரசுகள். ஆனால் இதனை மறுத்துவிட்ட பார்வதி அம்மாள், மீண்டும் தன் சொந்த மண்ணுக்கே திரும்பினார். வல்வை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலில் பெண்களுடன் சேஷ்டை புரிந்த தமிழ் இளைஞர்கள் 8 பேருக்கு அபராதம்
சாட்டிக் கடலில் தண்ணீருக்குக் கீழால் நீந்திச் சென்று பெண்களுடன் சேஷ்டை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் தலா 2ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்ததுடன் அவர்களை எச்சரித்து விடுதலை செய்தது. இந்த விடயம் குறித்துத் தெரியவந்துள்ளதாவது: கடந்த சனிக்கிழமை சாட்டிக் கடலில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த சமயம் தண்ணீருக்குக் கீழால் நீந்திச்சென்ற யாழ்.குருநகரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் அவர்களுடன் சேஷ்டை புரிந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் 8 பேரைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்திருந்தினர்.
தமிழ்ச்சமூகம் இத்தனை அவலங்களின் பின்னரும் திருந்தவில்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். சிங்கள சமூகத்தை நோக்கி குற்றம் சுமத்துவதில் இருந்த கவனம் எமது சமூகத்தில் இருக்கின்ற ஊத்தைகளை கழுவ முன்வரவில்லை. தமிழ்ப்பிரதேசங்களில் நடைபெற்று வருகின்ற பல சம்பவங்கள் இன்னும் நாம் படிப்பினைகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. நல்ல அரசியல் தலைமையில்லை. நல்ல சிந்தனைவாதிகள் இல்லை. நல்ல அறிஞர்கள் இல்லை. 30வருட போராட்டத்தில் எல்லோரையும் கொன்று குவித்துவிட்ட ஒரு முடமான சமூகமாகி நிற்கிறது தமிழ்ச்சமூகம்.   இது எப்போ திருந்தி முன்னேறி வரப்போகிறது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக