வியாழன், 23 செப்டம்பர், 2010

மாமல்லன் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பதட்டம் : மாமல்லபுரத்தில் மறியல்

மாமல்லபுரத்தில், வன்னியர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட பல்லவ மன்னர் மாமல்லன் சிலையை, சமூக விரோத கும்பல் சேதப்படுத்தியதால், ஆத்திரமடைந்த வன்னியர் சங்கத்தினர், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், மறியலில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் மற்றும் திருக்கழுக்குன்றத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பதட்டம் நிலவுகிறது.

சில நாட்களாகவே இந்த பகுதியில், வன்னியர் சங்கத்திற்கும், விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் தகராறு இருந்து வருகிறது. நேற்று சமூக விரோத கும்பலால், மாமல்லன் சிலையை சேதப்படுத்தப்பட்டுள்ளது. கருங்கல்லால் ஆன மாமல்லன் சிலையை, 1992ம் ஆண்டு வன்னியர் சங்கம் சார்பில், மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் ராமதாஸ் திறந்துவைத்தார். புராதன சின்னம் அமைந்துள்ள பகுதியில் வைக்கப்பட்ட சிலையை அகற்றும்படி தொல்பொருள் ஆய்வுத்துறை வலியுறுத்தியது. அதை ஏற்று, மாமல்லபுரம் புறவழிச்சாலை சந்திப்பில் (கிழக்கு கடற்கரை சாலை) சிலை மாற்றி நிறுவப்பட்டது.

சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று காலை 8 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மறியல் நடந்த இடம் அருகிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் கொடிக்கம்பத்தை அடித்து நொறுக்கப்பட்டது. திருக்கழுக்குன்றத்திலும் பதட்டம் ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டன. அரசு பஸ் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டு உட்படசில இடங்களில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.  செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., லெனின் ஜேக்கப், போலீஸ் எஸ்.பி., பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. சிலை பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்த மூன்று போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக