திங்கள், 6 செப்டம்பர், 2010

சித்திரவதைக்குள்ளான ஆரியவதிக்கு ஆவிப் பிரச்சினையாம்: சவூதி சென்ற குழுவினர் தகவல

சவூதி அரேபியாவில் ஆணி அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஆரியவதி தொடர்பில் தற்போது சவூதி அரேபியாவில் வேறு விதமான கருத்தே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயும் பொருட்டு இலங்கையில் இருந்து சவூதி சென்ற குழுவினரே இவ்வாறு தெரிவிக்கின்றனர்
சவூதியில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையடல்களின் போது ஆரியவதிக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டது ஆவியின் வேலையாக இது இருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டதாக சவூதி சென்று திரும்பிய குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்
இதேவேளை, தொழில் வாய்ப்புக்காக குவைத் சென்றிருந்த காலப்பகுதியில் தாம் பல சித்திரவதைக்கு உள்ளானதாக சிலாபம் பகுதியைச் சேர்ந்த வசந்தா புஸ்பலதா என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த வருடம் ஜூலை மாதம் பணிப்பெண்ணாக  பணியாற்றுவதற்காக குவைத் சென்றுள்ளார்.
முகவர் நிலையம்  ஊடாக தாம் தொழில் வழங்குனரிடம் அனுப்பப்பட்ட  அனைத்து இடங்களிலும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் கடந்த புதன்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
தாம் வெளிநாட்டில் பல்வேறு சித்திரவதை அனுபவித்து, முடியாத சந்தர்ப்பத்தில் நாடு திரும்ப, தமது முகவரை அணுகியதாகவும், ஒரு லட்சம் தந்தால் மாத்திரமே இலங்கைக்கு திரும்ப முடியும் என முகவர் நிலையத்தால் தெரிவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் குறிப்பிட்டார்.
தன்னைப் போல் அந்த முகவர் நிலையத்தில் 150 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் அவர்கள் நாடு திரும்புவதற்கும், முகவர் நிலையத்தால் ஒரு லட்சம் ரூபா கேட்கப்பட்டதாகவும் வசந்தா புஸ்பலதா தெரிவித்துள்ளார்.
தமக்கு அங்கு நடந்த கொடுமைகளையும் தன்னைப்போல பிறருக்கு இடம்பெற்ற கொடுமைகளையும் தாம் கையடக்க தொலைபேசியின் மூலம் ஒளிப்பதிவு செய்து கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதுதொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரந்தெனியவிடம் வினவியதற்கு,  குவைத் தூதுவராலயத்திற்கு இந்த சம்பவம் தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக