சனி, 25 செப்டம்பர், 2010

பெண்களிடம் வழிப்பறிக் கொள்ளை! யாழ்.தமிழர் சென்னையில் கைது


by teavadai.wordpress.com
இந்தியாவின் சென்னை புறநகரில் பெண்களிடம் கத்தியை காட்டி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நடுத்தர வயது உடைய யாழ்ப்பாண தமிழர் ஒருவர் மடிப்பாக்கம் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் தனிப்படை அமைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார்.
43 வயது உடைய ஜெயசிங்கம் என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.  சென்னையை அடுத்த மடிப்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி  ஒருவர் வழிப்பறி செய்கின்றார் என்று புறநகர்ப் பொலிஸாருக்கு புகார்கள் வந்தன.
இவ்வழிப்பறி கொள்ளைக்காரனைப் பிடிக்க புறநகர் பொலிஸ் ஆணையாளர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவின் பேரில், பரங்கிமலை துணை ஆணையாளர் வரதராஜன் மேற்பார்வையில், மடிப்பாக்கம் உதவி ஆணையாளர் கலியதீர்த்தன் தலைமையில், மடிப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமாரவேலுவையும் உள்ளடக்கியதாக தனிப்படை அமைக்கப்பட்டது.
இத்தனிப்படையினர் புழுதிவாக்கம் பாலாஜி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக வந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட ஜெயசிங்கம் என்கிற இந்நபர் கடந்த சில நாட்களாக ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்தமையை ஒப்புக்கொண்டார். இவர் ஏற்கனவே ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் திருட்டுக்களில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து உள்ளார்.
இவரால் வழிப்பறி கொள்ளை செய்யப்பட்ட சுமார் 4 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள 25 பவுன் தங்க நகைகள் இவரின் உடைமையில் இருந்து மீட்கப்பட்டன. பின்னர் ஜெயசிங்கம் ஆலந்தூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக